210 தொகுதிகளில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் பேட்டி

39

சென்னை; சட்டசபை தேர்தலில் அதிமுக-திமுக இடையே தான் நேரடி போட்டி, அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இபிஎஸ் கூறி உள்ளார்.


@1brபிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி விவரம்:


முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே 4 முறை வெளிநாடு பயணம் சென்றிருக்கிறார். இது 5வது முறை என்று கருதுகிறேன். 5 முறை வெளிநாடு செல்கிற போது தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக செல்கிறேன் என்று அறிவிப்பை வெளியிட்டுத்தான் செல்கிறார்.


ஆனால் இந்த 5 முறை வெளிநாட்டு பயணத்தின் போது எவ்வளவு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்கள், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டதா? அதோடு, ஏற்கனவே தொழில் முதலீட்டு மாநாட்டை சென்னையில் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்கள். பல்வேறு காலக்கட்டத்தில் தொழில் செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது.


ஆக, திமுக ஆட்சிக்கு வந்த இந்த 52 மாத ஆட்சியில் எவ்வளவு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது, எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன? எத்தனை தொழில்கள் நடைமுறைக்கு வந்தன? அதனுடைய நிலவரம் என்ன? எத்தனை தொழில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது? அதனால் எவ்வளவு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்?


அதற்கு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று பலமுறை தெரிவித்தேன். இதுவரைக்கும் பதிலே இல்லை. வெறும் காகித அளவிலேதான் இருக்கிறது. இன்னும் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.


இதுவே அதிமுக ஆட்சி நடக்கும் போது, 2015ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடத்தினார். 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது. 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.


பெரும்பாலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்து அதனால் தொழில்வளம் பெருகி, பொருளாதார ஏற்றம் பெற்று, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பெற்றது. அதே வழியில் வந்த அதிமுக அரசு 2019 ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தி சுமார் 3 லட்சத்து 5000 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட தொழில்கள் எல்லாம் பல தொழில்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதனால் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.


இன்றைக்கு ஒரு அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனே அந்த தொழில் வந்துவிடுவது கிடையாது. அதற்கு முதல்கட்ட பணிகள் செயல்படுத்த வேண்டும். அந்த முதல்கட்ட பணி செய்வதற்கே 2 வருட காலம் பிடித்துவிடும். அதற்கு பிறகு அவர்கள் அதில் முதலீடு செய்து அதற்கு உண்டான தொழிற்சாலைகள் கட்டப்பட்டு, பிறகுதான் பயன்பாட்டுக்கு வரும்.


ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனேயே தொழில் முதலீடு வந்ததாகவும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும் கூறுவது பொய்யான செய்தியை விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பதுதான் பார்க்கப்படுகிறது.


திமுக அரசு ஒரு திறமையற்ற அரசு. நிர்வாக திறமையில்லாமல் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. எப்பொழுதும் திமுக இரட்டை வேடும் போடுகின்ற கட்சி. இன்றைக்கு திமுக ஆட்சி அமைந்த பிறகு, சமூக நீதி தமிழகத்திலே மறுக்கப்பட்டு விட்டது. திண்டிவனம் பகுதியில் ஒரு நகராட்சியில் நடந்த சம்பவம். நகராட்சியில் ஒரு ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிபுரிந்து வருகிறார். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.


அவரை நகராட்சி ஆணையாளர் அறைக்கு வரச்சொல்லி, அறையில் திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த காட்சி தொலைக்காட்சியில் பார்த்தோம். பட்டியலித்தைச் சேர்ந்த அதிகாரி என்பதால் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது.


அதேபோல சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு விழா நடைபெற்றது. அந்த அரசு விழாவிலே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கலந்து கொள்கிறார், உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.


அந்த நிகழ்ச்சியிலே நகர்மன்ற துணை தலைவர், மாவட்ட அமைச்சர் அருகில் அமர்ந்திருக்கிறார். நகர் மன்ற தலைவர் பெண்மணி, பட்டியலினத்தவர். பின் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார். ஆக. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு அவமரியாதை செய்வது இதில் இருந்து தெரிகிறது.


ஆக இந்த ஆட்சியில் சமூக நீதி என்று மக்களுக்கு கிடையாது. சமூக நீதி என்று சொல்வது வாயளவில் தான் சொல்கின்றன, நடைமுறையில் அல்ல. இது அன்றாடம் நிகழ்கின்ற நிகழ்வு. அதேபோல, ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இதுஒரு செயலற்ற அரசாங்கம்.


எங்கேயாவது ஆணவக்கொலை நடைபெற்றிருக்கிறது என்று சொன்னால் அதற்கு உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுத்தால் இந்த நிகழ்வு தொடராது இருக்கும். இன்றைய ஆட்சியாளர்களை பொறுத்தவரைக்கும் சட்டம் ஒழுங்காக இருந்தாலும் சரி, இப்படிப்பட்ட சம்பவங்கள் ஆனாலும் சரி, அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை. ஏன் என்றால் அவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். இன்றைக்கு அரசியல் தலையீடு அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்திலே நடந்து கொண்டு இருக்கிறது.


ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் ஆசை உண்டு. அது அவர்கள் சொந்த விருப்பம். யதார்த்தமான உண்மை, எந்தெந்த கட்சிக்கு தேர்தலில் போட்டி என்பது நன்றாக தெரியும். தமிழக மக்கள் மிகுந்த கூர்மையானவர்கள். சிந்திக்கக் கூடியவர்கள். தமிழகத்தில் 2 கட்சி தான் பெரிய கட்சிகள். அந்த 2 கட்சிகள் தான் இப்போது ஆண்டு... அந்த 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி இருக்கிறது. அது எந்த கட்சி என்பது நாட்டு மக்களுக்கு முழுமையாக தெரியும்.


அதோடு அதிமுகவை பொறுத்தவரைக்கும் சுமார் 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சிபுரிந்த கட்சி. அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் தமிழகம் இந்தியாவிலே சிறந்த மாநிலம் என்ற பெயர் பெறுகிற அளவுக்கு திட்டங்களை கொண்டு வந்து, அதனால் மக்கள் ஏராளமான நன்மைகளை பெற்றிருக்கின்றார்கள்.


எனவே நாங்கள் மக்களை சந்திக்கின்ற போது, தெளிவாக இதை எடுத்துச் சொல்லிவிட்டோம். அதே வேளையில் திமுக 4 ஆண்டுகாலம் ஆட்சியிலே இன்றைக்கு எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் வன்கொடுமைகள், இன்றைக்கு பல்வேறு போராட்டங்கள் விவசாயிகள் போராட்டம், அரசுஊழியர் போராட்டம்... இப்படி பல தரப்பில் இருந்தும் போராட்டத்தை இந்த அரசு சந்தித்துக் கொண்டு இருக்கிறது.இன்றைக்கு மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டு இருக்கின்றது.


ஆகவே நடைபெற இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி, சுமார் 210 இடங்களில் வெற்றி பெறும். பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.


மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரைக்கும் அதிமுக ஆட்சி இருக்கும் வரை நீதிமன்றம் வரை நாங்கள் நடவடிக்கை எடுத்துக கொண்டு இருந்தோம். இன்றைய அரசாங்கம் அதில் முழு கவனம் செலுத்தவில்லை என்று தான் கருதுகின்றேன்.


உண்மையிலேயே தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால் இன்றைய தினம் திமுக, இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இன்றைக்கு கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு நடந்து கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும்.


இன்றைக்கு தமிழகத்தின் ஜீவநதி காவிரி. இனியாவது முதல்வர், இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற காரணத்தினால் காங்கிரஸ் தேசிய தலைமையுடன் பேசி, கர்நாடக காங்கிரஸ் முதல்வர், நீர்பாசனத்துறை அமைச்சருடன் பேசி இந்த மேகதாது திட்டத்தை கைவிடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். செய்வார்களா என்று எதிர்பார்க்கிறோம்.


முல்லை பெரியாறு அணையை பொறுத்த வரைக்கும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உச்சநீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தின் மூலமாக 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம், முதல் கட்டமாக 136 அடியில் இருந்து 142 ஆக உயர்த்தப்பட்டுவிட்டு, பின்னர் 152 அடி உயர்த்துகிற போது அணையை பலப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


அந்த தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக அரசு இருக்கின்ற போது, அணைணை பலப்படுத்துவதற்கான முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டோம். ஆனால் கேரளா அரசு அணையை பலப்படுத்துவதற்கான கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல வனத்துறை மூலமாக அனுமதிக்கவில்லை. ஆகவே அந்த பணி இன்றைக்கு நிலுவையிலே இருக்கின்றது.


இன்றைக்கு ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். கேரளாவில் கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்கின்றார்கள். எனவே அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தி 152 அடியை உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு எந்த முயற்சியும் ஸ்டாலின் எடுத்ததாக தெரியவில்லை.


இனிமேலாவது இண்டி கூட்டணி என்று சொல்லிக் கொண்டு இருக்கிற முதல்வர், அந்த இண்டி கூட்டணி மூலம் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை பெற்றுத்தருவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


இவ்வாறு இபிஎஸ் பேட்டியில் கூறினார்.

Advertisement