பரங்கிமலை கன்டோன்மென்டில் திட, திரவ வள மேலாண்மை திட்டம் 

பரங்கிமலை: பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு சார்பில், திட மற்றும் திரவ வள மேலாண்மை திட்டம் துவக்கப்பட்டது.

சென்னை, பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு சார்பில், ராணுவ வீரர்கள் வசிக்கும் முகுந்த் வரதராஜன் காலனி குடியிருப்புகளுக்குள் பிரதமரின் 'துாய்மை இந்தியா' திட்டத்தில், திட மற்றும் திரவ வள மேலாண்மை திட்டம் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தை, பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய துணைத் தளபதி மேஜர் ஜெனரல் முருகேசன் துவக்கி வைத்தார்.

திடக்கழிவுப் பிரிப்புக்காக, 140 ஜோடி சிவப்பு, பச்சை நிற குப்பை தொட்டிகளை கன்டோன்மென்ட் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி வினோத் விக்னேஸ்வரன், போர்டு நியமன உறுப்பினர் குணா, திட மேலாண்மை வல்லுநர் சீனிவாசன், சென்னை பஞ்சாப் அசோசியேஷன் அனுஜ் திங்ரா ஆகியோர் வினியோகித்தனர்.

திட வள மேலாண்மையில் உள்ள செயல்முறைகளில் உலர் இலை உரமாக்கல்; மாடித் தோட்டங்கள்; சமையலறைத் தோட்டங்கள்; கட்டுமான கழிவு; மட்காத பொருட்கள் என, 169 வகைகளாகப் பிரித்து உரம் தயாரித்தல், பிற பொருட்கள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

திரவ வள மேலாண்மை வாயிலாக கன்டோன்மென்ட் பகுதிக்குள் கல்வாழைத் தோட்டங்கள், வாழைத் தோட்டங்கள், உயிர்வாயு ஆலைகள் மற்றும் கொசு இல்லாத முயற்சிகள் போன்றவற்றிற்கு குளியலறை, சமையலறை போன்றவற்றில் இருந்து வெளியேறும் நீரை சுத்திகரித்து பயன்படுத்தப்பட உள்ளது.

திட மற்றும் திரவ வள மேலாண்மைத் திட்டம், சென்னையில் முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது என, கன்டோன்மென்ட் போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement