அவனியாபுரம் பைபாஸ் டூ ரிங்ரோடு வரை ரோட்டை விரிவுபடுத்துங்க சார்..: விமான நிலைய ரோட்டில் நெரிசல் குறைய வாய்ப்பு

3

மதுரை: மதுரை அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் இருந்து ரிங்ரோடு செல்லும் பெரியார் நகர் ரோட்டில் கனரக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அந்த ரோட்டை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்தால் இருவழிப்பாதையாக மாற்றுவதன் மூலம், வருங்காலத்தில் விமான நிலைய ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.

மதுரை தெற்கு வாசல் முதல் மண்டேலா நகர் ரிங்ரோடு வரை 8.8 கி.மீ., தொலைவுக்கு ரோடு உள்ளது. விமான நிலையம் செல்லும் இந்த பிரதான ரோட்டில், அவனியாபுரம் பைபாஸ் முதல் ரிங்ரோடு வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது போக்குவரத்து நெரிசலின்றி உள்ளது. அதேசமயம் தெற்குவாசல் சந்திப்பில் இருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு வரை வில்லாபுரம், எம்.எம்.சி.,காலனி பகுதியில் இருபுறமும் ஆக்கிரமிப்பும், நெரிசலும் அதிகம் உள்ளன.

நகரின் மத்தியில் இருந்து ரிங்ரோடு வழியாக அருப்புக்கோட்டை, திருநெல்வேலி செல்ல இந்த ரோடே பிரதானமாக உள்ளது. இந்த ரோட்டில் அவனியாபுரம் பைபாஸ் ரோட்டின் மத்தியில் இடதுபுறமாக பிரிந்து ரிங்ரோடு வரை 2 கி.மீ., தொலைவுக்கு 15 அடி அகலத்தில் 'சிங்கிள்' ரோடாக செல்கிறது. மாநகராட்சி வசம் உள்ள இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.

ரிங்ரோடு பகுதியில் வளர்ச்சிப் பணிகள், கட்டுமானங்கள் அதிகம் நடப்பதால், கனரக வாகனங்கள், லாரிகள் அதிகம் செல்கின்றன. ஏராளமான தொழிலாளர்கள், வாகனங்களும் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. இப்போதே இதனை அகலப்படுத்துவது அவசியம்.

நகருக்குள் இருந்து ரிங்ரோட்டை தொடும் அனைத்து ரோடுகளும் நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இந்த ரோடு மட்டும் மாநகராட்சி வசமே உள்ளது. இதனையும் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்படைத்தால் விரிவுபடுத்தி மேம்படுத்த வசதியாக இருக்கும். அதற்கேற்ப ரோட்டின் அருகில் கழிவுநீர் கால்வாய் ஒன்றும் அகலமாக உள்ளது. இதனை முறைப்படுத்தினாலே அகலமான ரோடு கிடைக்கும்.

இதை மேம்படுத்துவது மூலம் வருங்காலத்தில் பெருங்குடி, விமான நிலையம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். எனவே இப்போதே அதற்கு தயாராவது அதிகாரிகளின் கையில் உள்ளது.

Advertisement