நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டம்!

27

புதுடில்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை(எஸ்ஐஆர்) வரும் அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

எதிர்ப்பு



பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஜூன் இறுதியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.
இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பீஹார் முழுதும் தேர்தல் கமிஷன் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்தனர். அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஏழு லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்ததும், உயிரிழந்தவர்களின் பெயர்கள்,நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர்,வேறு பட்டியலில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, 65 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டனர். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆலோசனை



இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக நேற்று( செப்.,09)ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கூடுதல் சிஇஓ( வாக்காளர் பட்டியல் தலைமை அதிகாரி), துணை சிஇஓ மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுடன் தலைமை சிஇஓ ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பது குறித்தும் பூத் மட்டத்தில் அதிகாரிகள் நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

விரைவில்



மற்றொரு ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை வாக்காளர் பட்டியல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி உள்ளது. அதில், வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த முறை நடந்த திருத்தப் பணிகளின் தகவல்கள் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை அக்டோபர் மாதம் முதல் மேற்கொள்வது என தேர்தல் கமிஷன் முடிவு எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. பீஹார் தேர்தல் முடிவதற்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.


பீஹார் தவிர மற்ற மாநிலங்களில் இந்த பணிகளின் போது வாக்காளர்கள், கையெழுத்திட்ட படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியிருக்கும். அதில் வயது, குடியுரிமைக்கான ஆவணங்களை இணைக்க வேண்டியிருக்கும். மற்ற தகவல்களுக்கு ஆவணங்களை இணைக்க தேவையருக்காது என தெரிகிறது.


இந்தப் பணிகள் ஒரு மாதம் நடக்கும் என தெரிகிறது. இதற்கு அடுத்து வாக்காளர்கள் ஆட்சேபனை தெரிவிக்க 25 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இதன் பிறகு 2026 ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement