ஆவணம் ஆகும் சங்க இலக்கியம்!

மருங்கூர்



கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து 12 கி.மீ., தொலைவிலும், கடலூரில் இருந்து மேற்கே 32 கி.மீ., தொலைவிலும் உள்ளது மருங்கூர். தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில், பாக்யலட்சுமி, சுபலட்சுமி உள்ளிட்ட தொல்லியல் அதிகாரிகள், மருங்கூர் அகழாய்வை செய்து முடித்துள்ளனர்.


கடந்த 2024ல் தொடங்கி இந்த ஆண்டு மே மாதம் முடிந்த முதல் கட்ட அகழாய்வில், இரும்பு கால வாழ்விடமும், புதைப்பிடமும் கண்டறியப்பட்டு உள்ளன.
வாழ்விடம்


மருங்கூர் குளக்கரையின் கிழக்குப் பகுதியில் வாழ்விடப்பகுதி கண்டறியபட்டது. இங்கு, எட்டு குழிகள் தோண்டப்பட்டதில், கருப்பு-சிவப்பு, சிவப்பு மற்றும் சாம்பல் நிற பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை தவிர, சிவப்பு அல்லது பழுப்பு நிறம் பூசப்பட்ட பானை ஓடுகளும், சாம்பல் நிற ரவுலட்டட் வகை பானை ஓடுகளும், துளையிடப்பட்ட மண்பாண்ட வடிகட்டிகளும் கிடைத்துள்ளன.

Tamil News
Tamil News
Tamil News


நட்சத்திரம், அம்புக்குறி, வட்டம் உள்ளிட்ட குறியீடுகள் தனியாகவும், இணையாகவும் 12 ஓடுகளில் உள்ளன. இங்கு கிடைத்துள்ள 95 தொல் பொருட்களின் மண்ணடுக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. கரிமப் பொருட்கள் பகுப்பாய்வுக்காக சேகரிக்க ப்பட்டுள்ளன.

சேமிப்புக்கலன்



ஒரு குழியில் 4.40 மீட்டர் ஆழத்தில், 1.25 மீட்டர் உயரமுள்ள இரண்டு சுடுமண் சேமிப்புகலன்கள் வெளிப்பட்டன. அதே மண்ணடுக்கில், எரிந்த நிலையில், 10 செ.மீ., அளவுக்கு கரிமப்பொருட்களின் படிமம் காணப்படுகிறது. அங்கு, சமையல் உள்ளிட்ட பணிகள் நடந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

புதைப்பிடம்



மருங்கூரில், பண்ருட்டி நெடுஞ்சாலையை ஒட்டிய முந்திரிக் காட்டில், இரண்டு இடங்களில் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டன.

இவற்றில், குழிக்குள் ஈமத்தாழியை வைத்து, அதைச்சுற்றி சிறிய செம்புரான் கற்களை நிரப்பி, அதைச் சுற்றி வட்டமாக பெரிய செம்புரான் கற்களால் அரண் அமைத்து, தாழி உள்ள இடத்தை மிகப்பெரிய தொப்பிக்கல்லால் மூடி உள்ளனர்.

முதல் கல்வட்டம், 8 மீட்டர் விட்டத்தில் உள்ளது. இதில், இரண்டு தாழிகளும் அவற்றுள் எலும்புகளும், இரண்டு இரும்பு வாள்களும் கிடைத்துள்ளன.

இரண்டாவது கல்வட்டம், நிலப் பயன்பாட்டின் போது சிதைந்துள்ளது. இதில், மூடுகல்லாக கருங்கல்லுக்குப் பதில், 3 டன் எடையுள்ள செம்புரான் கல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதன்கீழ், ஐந்து தாங்கு கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியில் எட்டு ஈமத்தாழிகள் கிடைத்து உள்ளன. அவை, பல்வேறு மண்ணடுக்குகளில் பல அளவுகளில், பல விதங்களில் உள்ளன. அதனால், இந்த ஈமக்காடு, தொடர்ந்து, பல காலகட்டங்களில் புதைப்பிடமாக இருந்ததை அறியமுடிகிறது.

அனைத்து தாழிகளும் சிவப்பு



நிறத்திலேயே உள்ளன. தாழிகளோடு, சிவப்பு, கருப்பு- - சிவப்பு, சிவப்பு பூச்சு, கருப்பு பூச்சு கலையங்கள் கிடைத்துள்ன. ஜாஸ்பர் தாழிகளிலும், கலையங் களிலும், ஏராளமான சிவப்பு நிற மணிகள் கிடைத்து உள்ளன. ஒரு தாழி அருகே மட்டும், 350 சிவப்பு மணிகள் கிடைத்து உள்ளன. இவை, ராஜஸ்தான் மாநில பகுதிகளில் கிடைக்கும் ஜாஸ்பர்.


கழுத்தில் அணியும் ஆரத்தில் பல வடங்கள் உள்ள வகை உண்டு. அதில் வடங்களை பிரிக்க பட்டை பயன்படுத்தப்படுகிறது. நான்கு வடங்களை கோர்க்க பயன்பட்ட பட்டை ஒன்றும்; ஆறு வட பட்டை மூன்றும் கிடைத்துள்ளன.

காலகட்டம்



இங்கு, இரும்பு காலத்தின் இறுதி காலத்தில் இருந்து, தொடக்க வரலாற்று காலம் மற்றும் சங்க காலம் வரை மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வியல் பரிமாணங்கள் மற்றும் பரிணாமத்தை அறியும் வகையில், இங்கு அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது.

இங்கு சேகரிக்கப்பட்ட தாவர, கரிம, உலோக துகள்கள் உள்ளிட்டவை காலக்கணிப்புக்காகவும், அறிவியல் பகுப்பாய்வுக்காகவும் அனுப்பப்பட உள்ளன.

சங்க இலக்கியத்தில் மருங்கூர்



சங்க இலக்கியங்களில் மருங்கூர், மருங்கூர்பட்டினம் பற்றிய குறிப்புகள் உள்ளன. மருங்கூர்பட்டினம், பாண்டிய நாட்டு துறைமுகமான அழகன்குளத்துக்கு அருகில் உள்ளது.
இந்த மருங்கூருக்கு அருகில், சோழரின் தலைநகரான பூம்புகார், அவர்கள் முடிசூடும் சிதம்பரம் நடராஜர் கோவில், படைவீடு இருந்த அரசூர், தொல்லியல் தளமான அரிக்கமேடு, காரைக்காடு, குடிக்காடு, தொண்டைமான்நத்தம், மணிக்கொல்லை, குறுநில மன்னரின் ஆட்சிப்பகுதியான வீரான்பட்டினம் உள்ளிட்டவை உள்ளன. கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறைபிடித்த சேந்தமங்கலம், பாடல்பெற்ற திருவாமூர், திருவந்திபுரம், திருவதிகை கோவில்களும், பவுத்த, சமண மத போதகர்கள் இருந்த இடங்களும் உள்ளன.

நுண்கற்காலத்தின் வயது 12,000 ஆண்டுகள்



தமிழகத்தில், எட்டு இடங்களின் அகழாய்வுகளில், சென்னானுாரில் நுண்கற்கால கரிமப்பொருளின் காலக்கணிப்பு முடிவில், பொ.யு.மு., 10,000 ஆக உறுதியாகி உள்ளது. இதுபோல், புதிய கற்காலம் இரும்புக்காலம். வரலாற்று தொடக்க காலம் சங்ககாலம் உள்ளிட்டவற்றின் காலங்களையும் உறுதி செய்ய கரிமங்கள் கிடைத்துள்ளன. திருமலாபுரத்தில் சதுர வடிவ ஈமக்காடு முதலில் கிடைத்துள்ளதுடன், ஆதிச்சநல்லுாரை போன்ற வெண்கல பொருட்களும் கிடைத்துள்ளன. அவற்றின் முடிவுகள், தமிழக வரலாறுக்கு துணை நிற்கும். அடுத்தகட்டமாக எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய உள்ளோம்.



-ஆர்.சிவானந்தம்,
இணை இயக்குநர், தமிழக தொல்லியல் துறை

Advertisement