சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது!

5

பெங்களூரு: சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி தொடர்பான பண மோசடி வழக்கில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ண செயிலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான சதீஷ் கிருஷ்ண செயில் மீது, சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்பாக 2010ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.


சதீஷ் செயில், 1.25 லட்சம் டன் இரும்புத்தாதுவை 2010 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஏற்றுமதி செய்துள்ளார். அந்த இரும்புத்தாது, வனத்துறையால் பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகும். அதன் மொத்த மதிப்பு 86 லட்சம் கோடி ரூபாய்.


கடந்த 2024 அக்டோபர் மாதம் இவர் மீதான இரும்புத்தாது ஏற்றுமதி மோசடி வழக்கை விசாரித்த எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஏழாண்டு சிறையும் 44 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் அவர் மீதான தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கிடையே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில், சதீஷ் செயில் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சதீஷ் கிருஷ்ண செயில் வீட்டில் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத சொத்து, ஏராளமான பணம் மற்றும் நகைகளைக் கண்டறிந்தது. இதையடுத்து அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

தொடர் நடவடிக்கை குறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ண செயில் அமலாக்கத்துறையின் பெங்களூரு மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் 9-10 இடைப்பட்ட இரவில் காவலில் எடுக்கப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை அமலாக்க இயக்குநரகத்தின் ஒரு நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வாறு அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


சமீபத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகளால் கைது செய்யப்பட்ட மூன்றாவது காங்கிரஸ் எம்.எல்.ஏ., இவர் ஆவார். ஏற்கனவே சித்ரதுர்கா எம்.எல்.ஏ., வீரேந்திரா, தார்வாட் ரூரல் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ண செயில் கைதாகியுள்ளார்.

Advertisement