கத்தார் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

16

புதுடில்லி: கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையான்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது எனக்கூறியுள்ளார்.



காசாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு அழிக்கும் விதமாக, இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.


ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை கத்தார் அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர்.


இந்தத் தாக்குதலில் கத்தார் பாதுகாப்பு படை வீரர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், தங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.


கத்தார் நாட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் பேசினேன். அப்போது தோஹாவில் நடந்த தாக்குதலுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தேன். சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையான்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது. பதற்றத்தை தவிர்ப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும், மோதல் அதிகரிப்பதை தவிர்ப்பதற்கும் இந்தியா ஆதரவு அளிக்கிறது.


பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக இந்தியா நிற்கிறது. அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதம் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராக உள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


@twitter@https://x.com/narendramodi/status/1965787289226788992twitter

Advertisement