நகைக்கடையில் கத்தியை காட்டி திருட முயன்ற பெண் சிக்கினார்

திருவொற்றியூநகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து, கத்தியை காட்டி மிரட்டி திருட முயற்சித்த பெண் சிக்கினார்.

திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை, சன்னிதி தெருவில், தேவராஜ் ஜெயின், 60, என்பவர், 'மஞ்சு ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று மதியம், பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், மூன்று சவரன் செயின், ஒரு சவரன் வளையல் மற்றும் ஒரு சவரனில் கம்மல் உட்பட ஐந்து சவரன் நகைகளை வாங்கியுள்ளார்.

பின், தன் பையில் இருந்த சிறிய கத்தியை ஒரு கையிலும், மற்றொரு கையில் மிளகாய் பொடியையும் எடுத்த அப்பெண், தேவராஜ் ஜெயினை தாக்க முயற்சித்தார்.

கடையில் இருந்தோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், அப்பெண்ணை பிடித்து தர்ம அடி கொடுத்து, திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்ட பெண், காலடிப்பேட்டை மேற்கு மாட வீதியைச் சேர்ந்த ஜெயசித்ரா, 44, என்பதும், தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிவதும் தெரிந்தது.

கணவருக்கு தெரியாமல் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறி வந்த ஜெயசித்ரா, நுாதன முறையில் திருட முயற்சித்தது தெரியவந்தது. போலீசார், அப்பெண்ணை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement