கடலில் கார் ஓட்டிய போதை ஆசாமிகள் : கயிறு கட்டி கரை சேர்த்தனர் மீனவர்கள்

12


கடலுார்:கடலுார் அருகே கடலில் காரை ஓட்டி விஷப்பரீட்சையில் இறங்கிய போதை ஆசாமிகளை, மீனவர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர், 'மஹிந்திரா சைலோ' காரில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலுார் வந்தனர். காரில் இருந்த மூன்று பேர் மதுபோதையில் இருந்தனர். கடலுார் முதுநகர் அடுத்த சொத்திக்குப்பம் கடற்கரையில் அதிகாலை, 3:00 மணியளவில் காரில் சென்றனர்.

அப்போது, போதை ஆசாமி ஒருவர், 'நம்ம கார் 4 வீல் டிரைவ் மெக்கானிசம்... மணற்பரப்பிலும் ஓடும்' என்று கூற, போதையில் உடன் இருந்தவர்கள், உடனே கடற்கரை மணற்பரப்பில் காரை ஓட்டி சென்றனர். காரில் இருந்த மற்றொரு போதை ஆசாமி, 'இந்த கார் மணற்பரப்பில் மட்டுமின்றி, தண்ணீரிலும் செல்லும்' என, கூறினார்.

இதை மற்றொருவர் மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, காரை தண்ணீரில் இறக்கி சோதனை ஓட்டம் ஓட்டி பார்த்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தவர்கள், சொத்திக்குப்பம் அருகே காரை அருகில் உள்ள கடலில் இறக்கி விஷப்பரீட்சையில் ஈடுபட்டனர்.

கார் கடலில் சில அடி துாரம் சென்றதும் இன்ஜின் ஆப் ஆனது. அலையின் வேகத்தில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடற்கரையில் மீன் வலைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கார் கடலில் தத்தளிப்பதை பார்த்து, அவசரமாக ஓடிவந்து, உள்ளே சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அவர்களில் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, கடலில் இருந்த காரை டிராக்டரில் கயிறு கட்டி இழுத்து கரை சேர்த்தனர். தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து புகார் ஏதும் வராததால் போதை ஆசாமிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement