பீஹார் சட்டசபை தேர்தல் எதிரொலி: சலுகை அறிவிப்பில் ரயில்வே தீவிரம்

6

சென்னை: பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், புதிய ரயில்கள் இயக்கம், 10 ரயில்கள் நீட்டிப்பு போன்ற அறிவிப்புகளை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த அரசின் பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிகிறது. விரைவில் அங்கு பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், ரயில்வே துறையின் கவனம் பீஹார் பக்கம் திரும்பி உள்ளது.

அம்மாநில மக்களை கவரும் வகையில், பல ஆண்டுகளாக இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் பணியை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களை இணைக்கும் பாகல்பூர் - தும்கா -ராம்பூர்ஹட் இடையே, 177 கி.மீ., நீளமுள்ள ஒரு வழி ரயில் பாதையை, 3,169 கோடி ரூபாய் செலவில் இரட்டை வழிப்பாதையாக மாற்ற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன், ஈரோட்டில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக, பீஹார் மாநிலம் ஜோக்பானிக்கு, 'அம்ரித் பாரத்' ரயில் சேவையை, நாளை மறுதினம் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி - ராஜேந்திரா நகர் விரைவு ரயில், பீஹார் மாநிலம் ஆராவுக்கும்; மஹராஷ்டிர மாநிலம் புனே - பீஹார் மாநிலம் தானாபூர் விரைவு ரயில் சுபாலுக்கும்; பீஹார் மாநிலம் ராஜ்கிர் ரயில், ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மாவுக்கும் என, மொத்தம் 10 விரைவு ரயில்களின் சேவையை நீட்டித்து இயக்க, அந்தந்த ரயில்வே மண்டலங்கள் தயாராக வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வேயில் நீண்ட காலமாக இருந்த கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்படுவது, பீஹார் மாநில ரயில் பயணியர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement