அமைதி, செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி

24


இம்பால்: மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம் என வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.


வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. அவ்வப்போது அசம்பாவிதம் தொடர்ந்த நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ( செப்.,13) மணிப்பூர் சென்றார். மணிப்பூரின் சுரசந்த்பூர் செல்லும் பிரதமர் அங்கு ரூ.7, 300 கோடி மதிப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மணிப்பூர் தைரியம் மற்றும் துணிச்சலின் பூமி. மணிப்பூர் மக்களின் ஆர்வத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். மணிப்பூர் என்ற பெயரிலேயே ரத்தினம் உள்ளது. இது வரும் காலங்களில் வட கிழக்கு மாநிலங்களில் பொலிவை ஏற்படுத்தும். புதிய திட்டங்கள் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வை மேம்படுத்தும்.



மணிப்பூரின் மலைகள் விலைமதிப்பற்ற பரிசு. இத மக்களின் கடின உழைப்பின் அடையாளமாகவும் உள்ளன. அமைதிக்கான மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மலைகள் மற்றும் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களிடையே மோதலுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன. மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். நான் இந்த மாநில மக்களுக்கு ஆதரவாக இருப்பேன்.


மணிப்பூரின் வளர்ச்சிப் பாதையில் பயணத்தை விரைவுபடுத்த மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.வளர்ச்சிக்கு அமைதி மிக முக்கியமானது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் அமைதி பாதையில் செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மணிப்பூரில் ரயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ரூ.1,200 கோடி திட்டங்கள்



மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ரூ.1200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மந்திரிபுக்ரியில் உள்ள சிவில் செயலகம், ஐடி சிறப்பு பொருளாதார மண்டலக் கட்டிடம் மற்றும் மந்திரிபுக்ரியில் உள்ள புதிய காவல் தலைமையகம், டில்லி மற்றும் கோல்கட்டாவில் மணிப்பூர் பவன் கட்டடம், 4 மாவட்டங்களில் பெண்களுக்கான பிரத்யேக சந்தைகள் ஆகியவவை திறக்கப்பட்டுள்ளது.



Advertisement