அயல்நாடுகளில் வாழ்பவர்களை தமிழகமும், தமிழக அரசும் என்றைக்குமே மறக்காது: உதயநிதி பேச்சு

8

சென்னை:அயல்நாடுகளில் வாழ்பவர்களை தமிழகமும், தமிழக அரசும், தமிழக மக்களும் என்றைக்கு மறக்க மாட்டார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.



தமிழக என்ஜினியர்களுக்கு பாலமாக செயல்பட்டு வரும் சர்வதேச தமிழ் பொறியாளர் மன்றத்தின் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார்.


அப்போது அவர் பேசியதாவது:


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெரிய கட்டுமானங்கள், அணைகளை கட்டிய பெருமை நம் தமிழர்களுக்கு உண்டு. இன்று உலகத்தில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழ் பொறியாளர்களை சந்திக்கலாம்.


மிக பெரிய நிறுவனங்களில், பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் நம் தமிழ் பொறியாளர்கள். சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தில் 5000க்கும் அதிகமானோர் இருக்கின்றனர். 20க்கும் அதிகமான நாடுகளில் இருந்து கலந்து கொண்டது மிகவும் சிறப்பு.


அண்மையில் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து சென்று வந்தார். அப்போது உங்களில் பலர் அவரை அன்போடு சந்தித்தீர்கள் என்பதை அறிவேன். இன்றைக்கு ரூ. 15,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை அவர் ஈர்த்துக் கொண்டு வந்துள்ளார்.


முதலீடுகளை மட்டுமல்ல, 18,000 வேலைவாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழக பொறியாளர்கள் இருக்கிறீர்கள். அதற்கான முதல் விதை போட்டவர் கருணாநிதி.


இன்றைக்கு தமிழகம் முழுக்க அதிகளவு பொறியியல் கல்லூரிகளை அவர் தொடங்கினார். பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லை என்று அறிவித்தவர் அவர். இந்த படிப்பை படிக்க நினைக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்தவர் கருணாநிதி.


இன்று அவரால் (கருணாநிதி) தான் நாட்டிலேயே ஆண்டுதோறும் தகுதியான அதிகமான என்ஜினியரிங் பட்டதாரிகள் உள்ள மாநிலம் ஆக தமிழகம் உள்ளது. அரசு பள்ளிகளில் படித்துவிட்டு, வெளிநாடுகளில் உயர்கல்வி செல்வோரின் முழு சட்டணச் செலவையும் தமிழக அரசு ஏற்றது.


ஆட்சிக்கு வந்த பின்னர், அயலக தமிழர் நலனுக்காக தனி ஒரு அமைச்சகம் அமைத்தார் முதல்வர் ஸ்டாலின். அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் உங்களை தமிழகமும், தமிழக அரசும், தமிழக மக்களும் என்றைக்கு மறக்க மாட்டார்கள்.


இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Advertisement