அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு

புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான அசாமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் மற்றும் பூடானிலும் உணரப்பட்டது.
அசாமில், நிலத்தில் இருந்து 5 கி.மீ ஆழத்தில் இன்று மாலை 4.41 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், உயிரிழப்பு அல்லது கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. மேற்கு வங்கத்தின் வடக்கில் சிலிகுரி, ஜல்பைகுரி, கூச்பெஹார் உள்ளிட்ட சில இடங்களிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிவிட்டுள்ளதாவது: இதுவரை, பெரிய சேதம் அல்லது உயிர் இழப்பு எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. நாங்கள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். உடல்குரி, சோனித்பூர், தமுல்பூர், நல்பாரி மற்றும் அசாமின் பல மாவட்டங்களில் வசிப்பவர்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.இவ்வாறு ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிவிட்டுள்ளார்.
