சீக்கிய பெண் மீது பாலியல் தாக்குதல்: இன வெறியால் பிரிட்டனில் கொடுமை

பிரிட்டன்: பிரிட்டனில் "உன் நாட்டுக்கே திரும்பி போ" என்று கூறி, சீக்கிய பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும், புலம்பெயர் மக்களுக்கு எதிராக தொடர்ந்து குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பிரிட்டனில், 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறித் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ளார். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் "உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: பயங்கரமான சம்பவம். சீக்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ஆண்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் எங்களிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்பியான, பிரீத் கவுர் கில் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். அவர், "இது தீவிர வன்முறை மற்றும் இனவெறியின் வெளிப்பாடு. குற்றவாளிகள் இங்குதான் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சீக்கிய பெண்ணிற்கு நீதி கிடைக்கவும் சீக்கிய சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார். பிரிட்டனில் சமீப காலமாக இனவெறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என சீக்கிய சமூகத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.




