போராட்டத்தில் உயிரிழந்தவர்களை தியாகிகளாக அறிவித்தது நேபாளம்

காத்மாண்டு : நேபாளத்தில் சமீபத்தில் நடந்த இளம் தலைமுறையினரின் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை, 'தியாகி'கள் என அறிவிக்கப்படுவதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்கப்படும் என, அந்நாட்டின் தற்காலிக பிரதமர் சுசீலா கார்கி அறிவித்து உள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் முன்னணி சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததை தொடர்ந்து, கடந்த வாரம் அங்கு நாடு முழுதும் 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக மாறியது. இதை தொடர்ந்து, பார்லிமென்ட், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள், கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இதன்படி, சுசீலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக சமீபத்தில் பதவியேற்றார். அதன்பின் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அந்நாட்டின் பார்லிமென்டுக்கு வருகிற மார்ச் 5ம் தேதி முறைப்படி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
சுசீலா உள்துறை அமைச்சகத்தின் வளாகத்தில் உள்ள சிங்கா தர்பாரில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முறைப்படி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சிறிது நேரத்தில், அனைத்து அமைச்சகங்களின் தலைமை செயலர்கள் மற்றும் செயலர்களுக்கான கூட்டத்தை கூட்டினார். மேலும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் பேசப்பட்டது.
இளம் தலைமுறையினரின் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை தியாகிகளாக இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி அறிவித்தார். மேலும், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாகவும் அறிவித்தார். காயமடைந்த போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.
போராட்டங்களின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான அறிக்கைகளை தயாரித்து வழங்குமாறு, அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாரத்தை அனுபவிக்க வரவில்லை
அரசு அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டங்களின்போது, நேபாளத்தின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி கூறியதாவது: வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விசாரிக்கப்படும். நானும், என் குழுவும் இங்கு அதிகாரத்தை அனுபவிக்க வரவில்லை. நாங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் பதவியில் நீடிக்க மாட்டோம். புதிய பார்லிமென்டிடம் பொறுப்பை ஒப்படைப்போம். உங்கள் ஒத்துழைப்பின்றி நாங்கள் இதில் வெற்றி பெற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
இந்தியா வரியை குறைக்க வேண்டும்: அமெரிக்க அமைச்சர்
-
அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு
-
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்
-
ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்
-
இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கே அமைந்த மாமனிதர் இளையராஜா: ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு
-
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்: உற்பத்தி பாதிப்பு