மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கிறது; விமர்சனங்களுக்கு நிதின் கட்கரி பளீச்

19

புதுடில்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அரசாங்கத்தின் முயற்சியால் தனிப்பட்ட ஆதாயம் கிடைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிராகரித்துள்ளார்.


பெட்ரோலில் 20% எத்தனை நாள் கலக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தாலும், அது உண்மைக்கு புறம்பானது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.


இந்த சூழலில், நிதின் கட்கரி மகன் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால் அவர் எத்தனாலை அதிக அளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என்று விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை நிதின் கட்கரி நிராகரித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: எனது மகன்கள் சட்டப்படி தொழில் செய்ய நான் வழிகாட்டுகிறேன். நான் ஆலோசனைகளை வழங்குகிறேன். ஆனால் மோசடியில் ஈடுபடுவது கிடையாது. சமீபத்தில், என் மகன் ஈரானில் இருந்து 800 கண்டெய்னரில் ஆப்பிள்களை இறக்குமதி செய்தார்.


அதோடு இந்தியாவில் இருந்து 1000 கண்டெய்னரில் ஈரானுக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்தார். எனது மகன் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுகிறார். எனக்கும் சொந்தமாக சர்க்கரை ஆலை இருக்கிறது. அதோடு ஒரு சாராய ஆலை, மின் உற்பத்தி மையமும் எனக்கு இருக்கிறது.
@quote@நான் எனது தனிப்பட்ட சுயலாபத்திற்காக விவசாயத்தில் பரிசோதனை செய்வதில்லை. quote


உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன்.
நான் உங்களுக்கு முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன், நான் இதையெல்லாம் என் சொந்த சம்பாத்தியத்திற்காகச் செய்யவில்லை, இல்லையெனில் நீங்கள் வேறு ஏதாவது நினைக்கலாம்.
எனக்கு எனது வருமானம் போதுமானது.


மாதத்திற்கு ரூ.200 கோடி சம்பாதிக்கும் அளவுக்கு எனக்கு மூளை இருக்கிறது. எனக்குப் பணப் பற்றாக்குறை இல்லை. எனது வணிகப் பரிந்துரைகள் லாபத்தால் அல்ல, வளர்ச்சியால் இயக்கப்படுகின்றன.இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

Advertisement