'டவுட்' தனபாலு

தமிழக, பா.ஜ., பிரமுகரான நடிகை கஸ்துாரி: 'மூன்று முறை, எம்.பி., மற்றும் மத்திய அமைச்சராக பணியாற்றி, 25 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் அன்புமணி, பா.ம.க., வில் இருக்கவே அருகதை இல்லை' என்பது, ராமதாசுக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது. கட்சியில் இருக்க அருகதை இல்லாத ஒருவரை, எப்படி மத்திய அமைச்சராக்கினார்... ராமதாசின் அரசியல் திசை, எதை நோக்கி போகிறது எனவும் தெரியவில்லை.
டவுட் தனபாலு: அரசியலில், வேண்டும் என்றால் ஒரு பேச்சும்; வேண்டாம் என்றால் வேறு பேச்சும் பேசுவது புதுசா என்ன... இதற்கு ராமதாசும் விதிவிலக்கு இல்லை... நீங்க இப்ப தான் அரசியலுக்கு வந்திருக்கீங்க என்பதால், போக போகத்தான் இந்த தத்துவம் உங்களுக்கு புரியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: வரும், 2026 சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே, எந்த தொகுதிகளை கேட்டு பெறுவது என்பதை முடிவு செய்ய, வரும், 18 முதல், 21ம் தேதி வரை, தமிழகம் முழுதும் உள்ள கட்சி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து, அந்த கட்சியின் தலைவர் கமல், ஆலோசனை நடத்த உள்ளார்.
டவுட் தனபாலு: தி.மு.க., தரப் போற ஒற்றை இலக்க, 'சீட்'களுக்காக, கமல் கட்சியில் இருக்கும் சில நிர்வாகிகளை வெட்டியா சென்னைக்கு அலைக்கழிக்கணுமா என்ற, 'டவுட்' தான் வருது... மிஞ்சி போனா, இவங்களுக்கு கிடைக்கப் போற மூணு சீட்களுக்கு இவ்வளவு, 'பில்டப்' தேவையா என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு, பழனிசாமி என்ற ஒற்றை மனிதருக்கு காவடி துாக்குபவர்களை, ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது. முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும் வரை, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டாக்கனி தான். பழனிசாமி தான், தி.மு.க.,வின் வெற்றி ரகசியம் என துணை முதல்வர் உதயநிதி உண்மையை கூறி இருக்கிறார். இதை, அ.தி.மு.க.,வினர் புரிந்து கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தப்ப, அவரின் தோழி சசிகலா சார்ந்த உங்க குடும்பத்துக்கு நிறைய பேர் காவடி துாக்கிட்டு இருந்தாங்களே... அதிகாரம் இருக்கிற இடத்தில் தான், காவடி துாக்குறவங்களும் இருப்பாங்க என்பது, 25 வருஷங் களுக்கும் மேலா அரசியலில் இருக்கும் உங்களுக்கு புரியலையா என்ற, 'டவுட்' தான் வருது!

