தசராவில் பாதுகாப்பு: டி.ஜி.பி., சலீம் ஆலோசனை

மைசூரு, : மைசூரு தசராவில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட போலீசாருக்கு, மாநில டி.ஜி.பி., சலீம் அறிவுரை வழங்கி உள்ளார்.
மைசூரு தசரா வரும் 22ம் தேதி துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் மாநில டி.ஜி.பி., சலீம், நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்சகர், சாமுண்டி மலையில் நடக்கும் தசரா துவக்க விழா, அரண்மனை வளாகத்தில் நடக்கும் ஜம்பு சவாரி, யுவ தசரா உட்பட நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.
அத்துடன், நகரம் முழுதும் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், முக்கிய இடங்களில் போலீஸ் கட்டுப்பாடு அறை, கமாண்டோ மையங்கள் குறித்தும் விளக்கினார்.
தசராவை சுமூகமாக நடத்தி முடிக்கும் வகையில், மற்ற மாவட்டங்களில் இருந்தும் போலீசார் அழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதுபோன்று, கே.எஸ்.ஆர்.பி., - நகர ஆயுத ரிசர்வ் படை - மாவட்ட ஆயுதப்படை, குதிரைப்படை போலீஸ், கமாண்டோ ஸ்குவார்டுகளுக்கு எஸ்.பி., அந்தஸ்து உள்ள அதிகாரிகளை நியமிக்கவும் மைசூருக்கு வரும் வெளிமாவட்ட போலீசார் தங்குவதற்கும், அவர்களுக்கான வசதிகளையும் செய்து தரவும் கோரிக்கை விடுத்தார்.
பின், டி.ஜி.பி., சலீம் கூறியதாவது:
கடந்தாண்டை விட, இந்தாண்டு அதிகளவில் சுற்றுலா பயணியர் வருகை தருவர்.
இந்நேரத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்கக் கூடாது.
அதுபோன்று, மத்துார் போன்ற சம்பவங்களும்; துவக்க விழாவின்போது பானு முஷ்டாக்கிற்கு எதிராக கோஷம் எழுப்பாத வகையிலும், போலீஸ் கண்காணிக்க வேண்டும்.
மைசூரின் அனைத்து நுழைவு வாயில்களிலும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும். நகரின் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணியரின் அனைத்து விபரங்களும் இருக்க வேண்டும்.
தசரா துவக்க விழா, ஜம்பு சவாரியின்போது வரும் வி.வி.ஐ.பி.,க்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழைய கட்டடங்களில் ஏற தடை
மைசூரு தசரா விஜயதசமி அன்று நடக்கும் ஜம்பு சவாரியை காண, உலகின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருவர். கடந்தாண்டு ஜம்பு சவாரியை காண, அரண்மனை சாலையில் இருந்து பன்னிமண்டபம் வரை இரு புறமும் உள்ள பழமையான பாரம்பரிய கட்டடங்கள், கட்டுமான பணியில் உள்ள கட்டடங்களின் மீது ஏறி, சுற்றுலா பயணியர் பார்த்தனர்.
இதை தவிர்க்கும் வகையில், நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், மாநகராட்சி கமிஷனர் ஷேக் தன்வீர் ஆசிப் மற்றும் போலீசார் நகரில் பழைய கட்டடங்களை ஆய்வு செய்தனர்.
ஜம்பு சவாரி செல்லும் வழித்தடத்தில் உள்ள லரான்ஸ்டவுன் கட்டடம், கே.ஆர்., சதுக்கம் கட்டடங்கள், தேவராஜா மார்க்கெட், பஞ்சமுகி சதுக்கம் கட்டடங்கள், குதிரை ஸ்டாண்ட் மற்றும் பிற கட்டடங்கள் பழமையான கட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த பழைய கட்டடங்கள், கட்டுமான பணியில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களிடம், ஜம்பு சவாரியின்போது, பொது மக்களை இங்கு அனுமதிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
செப்., 22ம் தேதி தசரா துவக்க நாளில் மலர் கண்காட்சி, மல்யுத்தம், உணவு கண்காட்சி, மின் விளக்கு அலங்காரம், புத்தக கண்காட்சி ஆகியவற்றை முதல்வரும், அமைச்சர்களும் துவக்கி வைக்க உள்ளனர்.
மோட்டார் சாகசம் ரத்து?
மைசூரு தசரா நிறைவு நாளில், பன்னிமண்டப மைதானத்தில், மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடக்கும். கடந்தாண்டு இந்திய ராணுவத்தின் 33வது கார்ப்ஸ் மிலிட்டரி போலீசாரின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சியை நடத்துகின்றனர். ராயல் என்பீல்டு, ஹீரோ எக்ஸ்பிளஸ் ப்ரோ பைக்குகள் இடம் பெறுகின்றன.
கடந்தாண்டு 'ஸ்வெத் அஸ்வா' குழுவினர் செய்த மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு 'கூஸ் பம்ப்' ஏற்படுத்தியது. அதேவேளையில், இவர்களின் சாகச நிகழ்ச்சி நிறைவு பெற தாமதமானதால், மற்ற நிகழ்ச்சிகளும் நிறைவு பெற தாமதமானது.
எனவே, இம்முறை மோட்டார் சாகச நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, புதிய நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்
-
முகத்தை துடைத்ததை அரசியலாக்குவதா? இபிஎஸ் ஆவேசம்
-
வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற எஸ்ஐ: வீடியோ பரவியதால் சிக்கல்!
-
தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு
-
தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை: திமுகவை விளாசிய அண்ணாமலை
-
ஆப்கனில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது: ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்
-
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிர்ப்பு; 12 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்ம மரணம்