மனைவிக்கு 'முத்தலாக்' கூறிய கணவர் மீது போலீசில் புகார்

சந்திரா லே - அவுட், : பெங்களூரில், மொபைல் போனில் பேசும்போது, 'முத்தலாக்' கூறியதாக கணவர் மீது போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.
பெங்களூரின் சந்திரா லே - அவுட் கங்கொண்டனஹள்ளியை சேர்ந்தவர் தான்ஜியா அஞ்சும், 28. இவருக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சி வியாபாரியான சபாஷ் அலி, 34, என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு குழந்தை இல்லை.
இதனால் மனைவியுடன் சபாஷ் அலி தகராறு செய்தார். சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், தான்ஜியா அஞ்சும், பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கடந்த 14ம் தேதி தான்ஜியாவுடன் மொபைல் போனில் தொடர்பு கொண்ட சபாஷ் அலி, 'முத்தலாக்' கூறிவிட்டு, மொபைல் இணைப்பை துண்டித்துவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த தான்ஜியா, தன் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து கங்கொண்டனஹள்ளியில் உள்ள மசூதியில் வைத்து,
இருதரப்புக்கும் இடையே பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, 'சபாஷ் அலி 'முத்தலாக்' கூறியது சரி தான்' என, ஒரு சிலர் கூறியதாக தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில், சபாஷ் அலியின் உறவினர்கள், தான்ஜியாவின் குடும்பத்தினரை தாக்கி உள்ளனர்.
மனமுடைந்த தான்ஜியா நேற்று காலை சந்திரா லே - அவுட் போலீஸ் நிலையத்தில், 'முத்தலாக்' கொடுத்த கணவர் மீது புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.
''கடந்த ஆண்டு சபாஷ் அலி, இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சில நாட்கள் வாழ்ந்துவிட்டு, அந்த பெண்ணிற்கும் 'முத்தலாக்' கொடுத்தார்,'' என, தான்ஜியாவின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.
