போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

போச்சம்பள்ளி:புரட்டாசி மாதம், நாளை மறுநாள், 17ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. இதையொட்டி பெரும்பாலான மக்கள், புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். தெய்வ வழிபாட்டுக்கு உரிய மாதமாக இருப்பதால் மக்கள் அசைவத்தை நாடமாட்டார்கள்.

இதனால் நேற்று, ஞாயிற்றுக்கிழமையில் மக்கள் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு ஆடு, கோழி வாங்க குவிந்தனர். அதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஆடு, கோழிகளை அதிகளவு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதன்படி, 12 முதல் 15 கிலோ வரை எடையுள்ள ஆடுகள், 11,000 முதல், 12,000 ரூபாய் வரையும், 15 முதல், 18 கிலோ வரையில் எடையுள்ள ஆடுகள், 12,000 முதல், 15,000 ரூபாய் வரையும் விற்பனையானது.
அதேபோல் கோழிகள், கிலோ, 450 ரூபாய் முதல், 550 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள், வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்றதால் மனநிறைவுடன் சென்றனர்.

Advertisement