சினிமா
குல தெய்வ கோயிலுக்கு போங்க : தனுஷ் அட்வைஸ்
தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தனுஷ் பேசும்போது, ''இட்லி கடை தான் படத்தின் ஹீரோ, அதனால் தான் இந்த தலைப்பு. நம் முன்னோர்கள்தான் நம் மூச்சு காற்று, அவர்கள் நமக்கு கொடுத்தது குல தெய்வம். அதை மறக்க கூடாது. இதுவரை குல தெய்வ கோயிலுக்கு போகாதவர்கள், இனி போங்க. நம் முந்தைய குடும்ப வாழ்க்கை, வேர்களை, நாம் வந்த வழிகளை நம் குழந்தைகளுக்கு சொல்லி குல தெய்வம் அருளை பெறுங்க'' என்றார்.
ரஜினி பட பாணியில் தர்ஷன் படம்
மோகன் குருசெல்வா இயக்கத்தில் தர்ஷன் நடிக்கும் படம் 'காட்ஸ் ஜில்லா'. முக்கிய வேடத்தில் கவுதம் மேனன் நடிக்கிறார். இது ரஜினியின் 'அதிசய பிறவி' பாணியில் பேண்டசி ஜானரில் உருவாகிறது. தர்ஷன் கூறுகையில், ''புராண கற்பனை கதை. நகைச்சுவையும் உண்டு. காதலில் தோற்ற இளைஞன் வாழ்வில் தெய்வீக சக்தி என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் படம்'' என்றார்.
மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த்
நவரசா வெப்சீரிஸிற்கு பின் 'அன்கஸ்டமைஸ்டு எர்த்' என்ற புதிய வெப் தொடரில் சித்தார்த் நடிக்கிறார். ஆங்கில எழுத்தாளர் ஜும்பா லஹிரியின் நாவலை வைத்து இந்த தொடர் தயாராகிறது. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் ரொமான்டிக் கதையில் உருவாகிறது. ரித்தேஷ் பத்ரா இயக்குகிறார். பிரீடா பின்டோ நாயகியாக நடிக்கிறார்.
'இளையராஜா' பயோபிக் திரைக்கதை எழுத ரஜினி ஆர்வம்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இளையராஜாவின் பயோபிக் படமான 'இளையராஜா' கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு துவங்கவில்லை. படம் டிராப் என்று கூட தகவல் வந்தது. இந்நிலையில் இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய ரஜினி, ''இளையராஜாவின் பயோபிக்கை சீக்கிரம் எடுத்து முடிங்கள். நான் வேண்டுமானாலும் திரைக்கதை எழுதித் தருகிறேன்'' என்றார். இதற்கு முன்பு கமல் கூட அப்படத்தின் திரைக்கதையை எழுதுவதாக தகவல் வெளியானது.