பா.ஜ.,வின் டில்லி 'பஞ்சாயத்து' அ.தி.மு.க.,வுக்கு 'டபுள் மைனஸ்' காங்., எம்.பி., கார்த்தி பேட்டி
மதுரை: பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்ததும், பெரிய கட்சியாக இருந்தும் 'பஞ்சாயத்து' என்ற பெயரில் அதன் தலைவர்கள் டில்லிக்கு அழைக்கப்படுவதும் அக்கட்சிக்கு 'டபுள் மைனஸ்' என சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆதரவு இருப்பதை ஏற்கிறேன். யார் கட்சி தொடங்கினாலும் ஆளுங்கட்சியை எதிர்த்து பேசுவது இயல்பு. எந்த ஒரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை ஆராய்ந்த போது தி.மு.க., ஆட்சியில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறை சொல்லி விட முடியாது.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஒரு பெரிய கட்சியாக இருந்தும் பா.ஜ.,வுக்கு துணை கட்சி போல் உள்ளது. ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. ஒற்றுமையாக இல்லாததால் பஞ்சாயத்து என்றால் அக்கட்சி தலைவர்கள் டில்லிக்கு அழைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பா.ஜ.,வுடனான கூட்டணியும், டில்லிக்கு தலைவர்கள் சென்றுவருவதும் அக்கட்சிக்கு 'டபுள் மைனஸ்'.
விஜய் ரசிகர்கள் எல்லா கட்சியிலும் உள்ளனர். அவர்கள் மாறும்போது அந்த கட்சிகளுக்கு சேதாரம் ஏற்படும். கூட்டணி ஆட்சி குறித்து கேட்கிறீர்கள், 1967 முதல் அந்த ஏக்கம் காங்.,க்கு உள்ளது. 2006 ல் அந்த வாய்ப்பு வந்த போது பயன்படுத்திக் கொள்ளவில்லை. மீண்டும் வாய்ப்பு வந்தால் காங்., பயன்படுத்திக்கொள்ளும். இவ்வாறு கூறினார்.