'தனி ஒருவனாக' தொழிலை நடத்த பங்குதாரரை கொலை செய்த நண்பர் கூலிப்படையாக செயல்பட்ட இலங்கை அகதிகள் உட்பட 7 பேர் கைது

மதுரை: மதுரையில் பார்சல் சர்வீஸ் தொழிலை தனி ஒருவனாக நடத்த திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி பார்ட்னரை கொலை செய்த கல்லாணை 50, உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரலில் இதே கூலிப்படையை ஏவி காரை மோத செய்து, விபத்தாக நாடகம் ஆடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை பார்க் டவுன் 2-ஆவது தெருபகுதியைச்சேர்ந்தவர் ராஜ்குமார் 52. முனிச்சாலை பகுதியில் பார்ட்னர் கல்லாணையுடன் சேர்ந்து பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்தார்.
மனைவி,மகன்உள்ளனர்.செப்.,12 இரவு வீட்டிற்கு டூவீலரில் சென்றபோது வீட்டருகே 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் மதுரை சந்தைப்பேட்டை பார்ட்னர் கல்லாணை, கூலிப்படையாக செயல்பட்ட ஆனையூர்அகதிகள் முகாமை சேர்ந்தசிவலிங்கம் 43, விக்னேஸ்வரன் என்ற ராம்கி 28, ரவிவர்மன் 57, மாடக்குளம் முரளி 50, மகபூப்பாளையம் ஜெயராஜ் 41, சிக்கந்தர் சாவடி லாரன்ஸ் என்ற வெங்கடேஸ்வரன் 41 ஆகியோரை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர்.
பாசத்தால் வந்த பகை போலீசார் கூறியதாவது: கொலையான ராஜ்குமாரும், கல்லாணையும் டிராவல் பார்சல் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். கல்லாணை லோடுமேனாக இருந்தவர்.
ராஜ்குமார் அலுவலக ஊழியராக இருந்தவர். பிறகு இருவரும் இணைந்து முனிச்சாலை பகுதியில் 'ஆர்.கே.' என்ற பெயரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தை தலா ரூ.50 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்து ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வருவாய் ஈட்டி வந்தனர். பெரும்பாலும் மதுரையில் ஜவுளி கடைகளுக்கான துணி பார்சலை 'டெலிவரி' செய்து வந்தனர். ஆறு மாதங்களுக்கு முன் தனது மகனையும் 'பார்ட்னராக' சேர்க்க வேண்டும் என கல்லாணை வற்புறுத்தினார்.
இதை ஏற்க மறுத்து ராஜ்குமார், 'நமது ஒப்பந்தத்தில் உன் மகனோ, என் மகனோ தொழில் 'பார்ட்னராக' சேர்த்துக்கொள்ளக்கூடாது என்றுள்ளது.
இதை நாம் இருவரும் மீறக்கூடாது' எனக்கூற, வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏப்ரலில் கொலை முயற்சி இருவரும் பிரிந்துவிட முடிவு செய்தபோது, அவர்களது நண்பர்கள் சமரசம் செய்தனர். இதன்பிறகே 'தனி ஆளாக இத்தொழிலை நான் நடத்தினால் என்ன' கல்லாணை முடிவு செய்து, ராஜ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.
கடந்த ஏப்ரலில் கல்லாணை வீட்டிற்கு மகபூப்பாளையம் ஜெயராஜ் தலைமையில் சிலர் பெயின்ட் அடிக்க வந்தனர்.
அவர்களிடம் தன் திட்டத்தை கல்லாணை கூறி ரூ.ஒரு லட்சம் தந்தார். வழக்கம் போல் இரவு வீட்டிற்கு டூவீலரில் சென்ற ராஜ்குமாரை வீட்டருகே காரை ஏற்றியதில் அவர் உயிர் தப்பினார்.
சுதாரித்த ஜெயராஜ், 'கவனக்குறைவால் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுவிட்டது' என நாடகமாடி மன்னிப்பு கேட்டு 'எஸ்கேப்' ஆயினர். இதுதொடர்பாக கூடல்புதுார் போலீசில் செய்யப்பட்ட புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
ரூ.10 லட்சம் கூலி இச்சூழலில் ரூ.10 லட்சம் பேசி அதே ஜெயராஜ் தலைமையில் கூலிப்படையை தயார் செய்து ராஜ்குமாரை கல்லாணை கொலை செய்துள்ளார். ராஜ்குமார் கடையில் இருந்து புறப்பட்டதும் மாறிமாறி டூவீலரில் அவரை பின்தொடர்ந்து சென்று கொலை செய்துள்ளனர்.
அவரது உடலை பார்த்து மனைவி கதறி அழுதபோது கல்லாணை ஒன்றும் தெரியாதவர் போல் சம்பவ இடத்தில் ஆறுதல்கூறி நாடகமாடியுள்ளார்.
அலைபேசி அழைப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கூறினர்.