அரசியலில் குதிக்கிறார் சித்தராமையா பேரன்? வருணா தொகுதி இளைஞர் காங்., அழைப்பு

முதல்வர் சித்தராமையாவுக்கு ராகேஷ், யதீந்திரா என்று இரண்டு மகன்கள். சித்தராமையாவின் தொகுதியான வருணாவில் அவரை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு ராகேஷிடம் இருந்தது. வருணா தொகுதி காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் நம்பிக்கையை ராகேஷ் பெற்றார். இதனால் சித்தராமையாவின் அரசியல் வாரிசாக ராகேஷ் கருதப்பட்டார்.
ஆனால் 2016ல் பெல்ஜியம் நாட்டிற்கு, சுற்றுலா சென்ற ராகேஷ், திடீர் மரணம் அடைந்தார். இது சித்தராமையாவை நிலைகுலைய வைத்தது. அதன்பின், அரசியலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, அரசியலில் இருந்து விலகி இருந்த, இரண்டாவது மகன் யதீந்திராவை அரசியலுக்கு அழைத்து வந்தார் சித்தராமையா.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் வருணாவில் போட்டியிட்டு யதீந்திரா வெற்றி பெற்றார். 2023 தேர்தலில் தந்தைக்காக தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு, தற்போது எம்.எல்.சி.,யாக உள்ளார்.
பிரசாரம் தேர்தலில் வருணா தொகுதியில் சித்தராமையாவுக்காக, அவரது குடும்பமே பிரசாரம் செய்தது. ராகேஷ் மகன் தவானும் தன் தாத்தாவுக்காக தீவிர பிரசாரம் செய்தார். 'தாத்தாவை போல நானும் அரசியலுக்கு வருவேன்' என்றார். தற்போது வெளிநாட்டில் தவான் படிக்கிறார்.
சமீபத்தில் வருணாவில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரசார், கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், ராகேஷை நினைவுகூர்ந்தனர். 'அவரது மகன் தவானை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும்' என, சித்தராமையாவுக்கு கோரிக்கை வைத்தனர்.
எதிர்பார்ப்பு 'அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என, சித்தராமையா ஏற்கனவே அறிவித்து விட்டார். இதனால் அவரது வருணா தொகுதியில் யதீந்திரா போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஒரு முறை எம்.எல்.ஏ., தற்போது எம்.எல்.சி.,யாக இருந்தாலும், சித்தராமையாவை போன்று மக்களை வசீகரம் செய்யும் திறமை, யதீந்திராவிடம் இல்லை.
வருணா தொகுதியை தக்க வைக்கும் முயற்சியாக, இளைஞரான தன் பேரன் தவானை, அரசியல் களத்திற்கு கொண்டு வர சித்தராமையா முயற்சி செய்யலாம். ஏற்கனவே ஒரு முறை, 'என் அரசியல் வாரிசு யதீந்திராவும், தவானும்' என, சித்தராமையா கூறி இருந்தார். இதனால் தவான் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
சித்தராமையாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, தவான் கன்னடத்தில் பேச திக்குமுக்காடினார். வெளிநாட்டில் படிப்பதால் கன்னடம் பேச சிரமப்படுகிறார் என கூறி, காங்கிரஸ் தொண்டர்கள் சமாளித்தனர். கன்னடமும் நன்றாக பேச தெரிந்து கொண்டால், அரசியலில் தவான் ஜொலிப்பார் என்பது வருணா காங்கிரசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- நமது நிருபர் -
மேலும்
-
திருட்டு மற்றும் சுரண்டல் திமுகவின் டிஎன்ஏவில் ஊறிப்போனது; அண்ணாமலை விமர்சனம்
-
மஹாராஷ்டிரா என்கவுன்டரில் பெண் மாவோயிஸ்டுகள் இருவர் சுட்டுக்கொலை
-
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களின் கைகளில் பணம் புரளும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
-
ஓரணியில் தமிழகம் எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்; முதல்வர் ஸ்டாலின்
-
புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாது: பிரதமர் மோடி சவால்
-
ஆந்திராவில் டிப்பர் லாரி, கார் மோதி விபத்து: 7 பேர் பரிதாப பலி