திருட்டு மற்றும் சுரண்டல் திமுகவின் டிஎன்ஏவில் ஊறிப்போனது; அண்ணாமலை விமர்சனம்

சென்னை: திருட்டு மற்றும் சுரண்டல் என்பது திமுகவின் மரபணுவிலேயே ஊறிப்போயுள்ளதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் கோவில் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட கேட்டரிங் உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக மதுரை மாநகராட்சி திமுக அவை தலைவர் ஒச்சி பாலு மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணத்தைக் கேட்டு சென்றால், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக நிர்வாகியின் இந்த செயலை பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருட்டு மற்றும் சுரண்டல் என்பது திமுகவின் மரபணுவிலேயே ஊறிப்போயுள்ளது. சமூக நீதியைப் பற்றி அவர்கள் திரும்பத் திரும்ப பேசி வந்தாலும், வெறும் வாய்ச்சொல்லாகத்தான் இருந்து வருகிறது.அரசியலிலோ அல்லது தன் கட்சி உறுப்பினர்களிடத்திலோ அதை கடைப்பிடிப்பதில்லை.
மதுரையில் தனக்கு வழங்கப்பட்ட பணியை முடித்த ஒருவர் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டதால், திமுக நிர்வாகியான ஒச்சு பாலு என்பவர், அவரை சாதியைச் சொல்லி திட்டியதோடு, பொது வெளியில் அவமானப்படுத்தி மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் உண்மையான தன்மையை பிரதிபலிக்கிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






