தேர்தலில் நாம் தோற்கவில்லை: கட்சியினரை கலகலப்பூட்டிய கமல்

சென்னை:' நாங்கள் பூஜை போட்டு அரசியலுக்கு வரவில்லை. தேர்தல்களில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம்' என, ம.நீ.ம., தலைவர் கமல் கூறியுள்ளார்.
சென்னையில் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து, சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தினார். மாநில நிர்வாகிகள் மவுரியா, தங்வேலு, அருணாச்சலம், ஊடக பிரிவு செயலர் முரளி அப்பாஸ், சென்னை மண்டல செயலர் மயில்வாகனன், மாவட்ட செயலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், 'தி.மு.க., கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும்; குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும்' என, கமலிடம் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அக்கூட்டத்தில் கமல் பேசியதாவது: நான் வீரத்திற்கு நெஞ்சை காட்டுவேன்; துரோகத்திற்கு முதுகை கூட காட்ட மாட்டேன். நாங்கள் பூஜை போட்டு அரசியலுக்கு வரவில்லை. தேர்தல்களில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம். எனக்கு வயதாகி விட்டதால், கட்சி துவக்கியதாக சிலர் கூறினர். எனக்கடுத்து கட்சியினர் தான் பிள்ளைகளாக இருக்கின்றனர். தமிழக நலனுக்காகத்தான் கட்சியை துவக்கினேன்.
பூத் கமிட்டிகளை சரியாக அமைக்க வேண்டும். இதற்கு முன் இருந்தவர்கள் ஏமாற்றி விட்டனர். ஆசியாவில் முதல் நடுநிலை கட்சி ம.நீ.ம., தான். இதை நான் பிரதமர் மோடியிடம் சொன்னேன். ஒரே நாடு தான். இதை இடது, வலது என பிரித்து சொல்லக்கூடாது. எனக்கு பின்னாலும் கட்சி இருக்க வேண்டும். அதனால் தான் தலைவர்களை நான் உருவாக்குகிறேன்.
'வாழும் காமராஜர், வாழும் காந்தி' என்ற பெயர் எனக்கு வேண்டாம்; கமல் என்ற பெயர் எனக்கு போதும். ஜாதி என்பது எனக்கு இடையூறாக இருக்கிறது. ஜாதி இருக்கிறதா, இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் வாழ்க்கையை ஐந்து ஆண்டுகளுக்கு, 5,000, 10,000 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு விடாதீர்கள்; ஓட்டு போடாமல் வீட்டில் இருப்பது தேசத் துரோகம்.
திராவிடம் நாடு தழுவியது. இங்கு இரண்டு கட்சிக்குள் அடங்கி விடுவது இல்லை. தேசியமும் இருக்க வேண்டும்; தேசமும் இருக்க வேண்டும். தமிழர்களுக்கென தனித்தன்மையும் இருக்க வேண்டும். இவ்வாறு கமல் பேசினார்.










மேலும்
-
பிரிட்டன் மன்னர் சார்லஸின் பரிசு; கடம்ப மரக்கன்றை பிரதமர் மோடி நடும் வீடியோ வைரல்
-
நாட்டின் வலிமையை எதிரிக்கு காட்டிவிட்டோம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்
-
வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்வதா? ராகுலை மக்கள் நம்பமாட்டார்கள் என்கிறார் கிரண் ரிஜிஜூ
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல்; ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றிமுகம்!