ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்வதா? ராகுலை மக்கள் நம்பமாட்டார்கள் என்கிறார் கிரண் ரிஜிஜூ

புதுடில்லி: இந்தியாவின் ஜனநாயகத்தை ராகுல் துஷ்பிரயோகம் செய்கிறார். அவரை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
டில்லியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பாகிஸ்தான் உருவாக்கும் போலி கதையை ராகுல் முன் வைத்தார். பாகிஸ்தான் என்ன போலி கதைகளை உருவாக்கினாலும், அதே கதையைத்தான் ராகுலும், அவரது கூட்டாளியும் இந்தியாவில் பேசி வருகின்றனர்.
எனவே, கடந்த சில ஆண்டுகளில், ராகுலும், அவரது குழுவும் இந்தியாவில் எதைப் பற்றிப் பேசினாலும், ஒரு கதையை உருவாக்க முயற்சித்தாலும், அதையே இந்திய எதிர்ப்புக் குழுக்களும் பாகிஸ்தானில் பேசுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளோம்.
பாகிஸ்தானுக்கு ராகுலுக்கு இடையே பல ஆண்டுகளாக பல்வேறு விஷயங்களை ஒற்றுமையை நாங்கள் கண்டறிந்தோம். இந்தியாவின் ஜனநாயகத்தை ராகுல் துஷ்பிரயோகம் செய்கிறார். அவரை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள். ராகுல் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க விரும்புகிறார்.
@quote@ஏழைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடியை தங்கள் தலைவராகக் கருதுகின்றனர்.quote
தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகு, ராகுல் தனது பலவீனங்களை மறைக்க பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே இருந்தால், அதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு மாறிவிட்டது, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எத்தனை பொய்?
அதேபோல், ராகுலுக்கு குறித்து பாட்னாவில் பாஜ எம்பி ரவி சங்கர் பிரசாத் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அவர் கூறியதாவது: ராகுலுக்கு என்ன பிரச்சனை? அவர் எத்தனை பொய்களைச் சொல்வார்? அவர் எவ்வளவு உண்மையான விஷயங்களை பொய்யாக திரித்து பேசுவார். அவரை நாங்கள் கடுமையாக விமர்சித்து பேசலாம். ஆனால் அது எங்கள் கலாசாரமும் அல்ல.
பாஜ கட்சியின் கலாசாரமும் அல்ல. கர்நாடகாவில் 2023ம் ஆண்டு முதல் யாருடைய அரசாங்கம் உள்ளது? காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆனால் அவர் பாஜ தேர்தலில் முறைகேடு செய்ததாக கூறுகிறார். அவர் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி உண்மைகளைத் திரிக்கிறார். அது ராகுலின் இயல்பாகிவிட்டது. ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் கண்ணியத்தைக் குறைத்துவிட்டார். இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.












