ஏன் இந்த நிலை..: பஸ் ஸ்டாண்ட், நிழற்குடைகளில் இல்லை துாய்மை  முகம் சுளிக்கும் வெளியூர் பயணிகள் ,பொதுமக்கள்

1

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் என அனைத்து பகுதி பஸ் ஸ்டாண்ட்களில் துாய்மை, பராமரிப்பு, அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதோடு பயணிகள் காத்திருப்பிற்கான நிழற்குடைகள் மது பிரியர்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது.

மாவட்டத்தில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் உட்பட அனைத்து பஸ் ஸ்டாண்ட்களை பார்த்தாலே முகம் சுளிக்கும் சூழல் தான் நிலவுகிறது. எங்கு திரும்பினாலும் துார்நாற்றம் வீசும் நிலை தான் நீடிக்கிறது. பயணிகள் மூக்கைப் பொத்திக் கொண்டுதான் செல்கின்றனர். நிழற்குடை , பயணிகள் காத்திருப்பு பகுதி என எந்தவித அடிப்படை வசதிகளுமே இல்லை. பஸ் ஸ்டாப்களில் பயணிகள் காத்திருப்பிற்கான நிழற்குடைகள் பகல் நேரங்களில் சிலர் துாங்குமிடமாகவும், இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் பாராகவும் மாறி வருகிறது. கடமைக்கென இவற்றை கட்டிவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர் .இது தொடர்பாக நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கை வைத்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. ஆன்மிகத்தலமான பழநி பஸ் ஸ்டாண்ட் நிலையும் இதேதான். இங்கும் முறையாக துாய்மைப் பணிகள் கூட மேற்கொள்வதில்லை. இதேபோல் கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட், வத்தலகுண்டு என மாவட்டத்தில் எந்த பஸ் ஸ்டாண்ட்களிலும் போதிய வசதிகள் இல்லை.

வெளியூர்களிலிருந்து வருவோர் பஸ் ஸ்டாண்ட்களை பார்த்து முகம் சுளிக்கும் நிலையே தொடர்கிறது . இதன் மீது எந்த நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்துவதில்லை. ஆனால் கடைகளுக்கான வாடகை வசூல், பஸ்களுக்கான வசூல் என வருவாய் ஈர்ப்பதில் மட்டும் ஆர்வமாக உள்ளனர். பயணிகளின் நலனுக்காக எந்தவித வசதிகளும் செய்து கொடுப்பதில் நாட்டம் காண்பிப்பதில்லை.

ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடமும் மறைமுக வசூலில் ஈடுபட்டு அனைத்தையும் அதிகாரிகள் அனுதிக்கின்றனர். பாதுகாப்பு வசதிகள், நேர பலகைகள், வழிகாட்டிகள் என பயணிகளுக்கு அத்தியவசியமான எதையும் காண முடிவதில்லை. குடிநீர் வசதி போதுமான அளவிற்கு இல்லை. கழிப்பறைகளுக்குள் செல்லவே முடியாத சூழல் இருக்கிறது.

..........

மேம்படுத்த வேண்டும்

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் அடிக்கடி பலர் மர்மமாக இறந்து விடுவது தொடர்கதையாகிறது. முதலில் அதனை கண்காணிக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட்களில் போதிய அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்து தருவது, கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது போன்றவை உறுதிசெய்யப்பட வேண்டும். இன்னும் பல பஸ் ஸ்டாண்ட்களில் இரவானாலே சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி விடுகிறது. இங்கு போலீஸ் கண்காணிப்பு அவசியமாகிறது. அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி பஸ் ஸ்டாண்ட்களை மேம்படுத்த வேண்டும் .

சதீஸ்குமார், முன்னாள் நகர தலைவர், பா.ஜ., திண்டுக்கல்.

..........

Advertisement