ஹெச்1பி விவகாரம்: பாதிப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கருத்தில் கொள்வர்; மத்திய அரசு நம்பிக்கை

புதுடில்லி: 'மனிதாபிமான அடிப்படையில் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கருத்தில் கொள்வர் என்று எதிர்பார்க்கிறோம்' என, ஹெச்1பி விசா கட்டண விவகாரம் தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.
எச்1பி விசாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, புதிய விசா மட்டுமின்றி, புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஹெச்1 பி விசா பெற்று பணியாற்றுவோரில், 72 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதால், இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எச்1பி விசா திட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளை நாங்கள் அறிந்தோம். இந்த புதிய நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளில் உள்ள தொழில் துறை, நிறுவனங்கள் இது பற்றி ஆலோசனை நடத்தும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் உள்ளிட்ட பரஸ்பர நன்மைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு கொள்கை வகுப்பாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். மனிதாபிமான அடிப்படையில், குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கருத்தில் கொள்வர் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

