எனக்கு நோபல் பரிசு கொடுத்தே ஆக வேண்டும்: மறுபடியும் டிரம்ப் அடம்

32

வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்திய எனக்கு கட்டாயம் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்றாலும் அவரின் அதிரடி நடவடிக்கைகள் குறையவில்லை என்று மக்களிடையே பெயர் பெற்றிருக்கிறார் டிரம்ப். தற்போது ஹெச் 1 பி விசா நடைமுறைகள் மூலம் உலக நாடுகளை முணுமுணுக்க வைத்துள்ள அவர் மே 10ம் தேதி முதல் பேச ஆரம்பித்த நோபல் பரிசு விவகாரத்தை மீண்டும் பேச ஆரம்பித்து இருக்கிறார்.

உலக நாடுகள் இடையே 7 போர்களை நிறுத்தியவன், இந்தியா-பாக். மோதலும் என்னால் தான் தீர்த்து வைக்கப்பட்டது என்று விடாமல் அறிவித்து வருகிறார் டிரம்ப். அவரின் கூற்றை இந்தியா முற்றிலும் நிராகரித்துள்ளது. 3ம் நாட்டின் தலையீட்டை அனுமதித்தது இல்லை என்றும் விளக்கம் அளித்துவிட்டது.

ஆனாலும், இந்தியா, பாகிஸ்தான் மோதலை முன்வைத்து அதை நான் தான் தீர்த்து வைத்தேன், எனவே எனக்கு நோபல் பரிசை தர வேண்டும் என்று அமெரிக்காவில் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது தமது ஆசையை போட்டு உடைத்திருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:

உலக அரங்கில், மதிக்கப்படும் பல விஷயங்களை செய்கிறோம். சமாதான உடன்படிக்கைகளை ஏற்படுத்துகிறோம். இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா நாடுகள் இடையேயான போர்களை நிறுத்தினோம்.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளை நினைத்து பாருங்கள், யோசித்து பார்த்தீர்கள் என்றால் நான் எப்படி அந்த போரை நிறுத்தினேன் என்று உங்களுக்கு தெரிய வரும். வர்த்தக ஒப்பந்தங்களை முன் வைத்து போரை நிறுத்தினேன். அந்நாடுகளின் தலைவர்கள் மீது எனக்கு அளவுகடந்த மரியாதை உண்டு.

இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, அர்மீனியா, அஜர்பைஜான், கொசோவோ, செர்பியா, இஸ்ரேல், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ருவாண்டா, காங்கோ நாடுகள் இடையே எழுந்த போர்களை நாங்கள் நிறுத்தினோம். இந்த போர்களில் 60 சதவீதம் வர்த்தகத்தை சுட்டிக்காட்டி நிறுத்தினோம்.

இந்தியாவை போன்று நானும் சொன்னேன். இங்கே பாருங்கள், நீங்கள் சண்டை போட போகிறீர்கள் என்றால், அவர்களிடம் (இந்தியாவை இங்கே குறிப்பிடுகிறார்) அணு ஆயுதங்கள் இருந்தால், நாம் எந்த வர்த்தகமும் செய்ய போவது இல்லை என்று நான் சொன்னேன். உடனே அவர்கள் போரை நிறுத்திவிட்டனர்.

எனக்கு ஒவ்வொருத்தரும் (மற்ற 7 நாடுகளை கூறுகிறார்) ஒரு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் அவர்களோ, நீங்கள் ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்கும் என்று சொன்னார்கள். அது ஒரு போர், அதுவும் மிக பெரிய போர். நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று சொல்லி இருக்கிறேன்.

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

Advertisement