நாடகம் ஆடுவது பழனிசாமியின் வேலை தி.மு.க., இளங்கோவன் கிண்டல்

விழுப்புரம்: தனது குடும்ப நலனுக்காக பா.ஜ.,வில் அடிமையாக பழனிசாமி சேர்ந்துள்ளார் என, தி.மு.க., செய்தி தொடர்பு குழு தலைவர் இளங்கோவன் கூறினார்.

விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டத்தில், அவர் பேசியதாவது:

கருணாநிதி இளமை பருவம் முதல் தி.மு.க.,வில் உழைத்து கட்சியை வளர்த்தார். அதன் பின்பு, 1967 ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்தது. ஆனால், தற்போது கட்சி துவக்குபவர்கள் உடனே முதல்வராக ஆசைப்படுகின்றனர்.

தி.மு.க., மக்களுக்கான திட்டங்களை வழங்கி வருகிறது. மக்கள் முன்னேற பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மக்களின் அடிப்படை தேவையான உணவு, கல்வி, மருத்துவம் இந்த மூன்றிலும் தி.மு.க., செலுத்தும் அக்கறையை எந்த கட்சியும் செலுத்தவில்லை.

உத்தரபிரதேசத்தில் பா.ஜ., முதல்வர் 5 ஆயிரம் பள்ளிகளை மூடியுள்ளார். இங்கு, பல பள்ளிகளை திறந்து கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.,வில் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையானால் தனக்கு தலைமை பொறுப்பு இருக்காது என்றும், தனது குடும்பத்திற்காகவும் பா.ஜ.,வில் அடிமையாக பழனிசாமி சேர்ந்துள்ளார். பொய்யை கூறி நாடகம் ஆடுவது பழனிசாமியின் வேலை. தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை மூலம் ஊனமுற்ற கல்வியை திணிக்க பா.ஜ., அரசு முயல்கிறது. இவர்களின் முயற்சி நம்மை அடிமையாக்க வேண்டும் என்பது தான். நாங்கள் ஓரணியில் இருந்து தமிழகத்தின் பெருமையை காப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement