வங்கதேசம், இந்தியா இடையே பிரச்னைகள்; ஷேக் ஹசீனா மீது பழி சுமத்தும் முகமது யூனுஸ்!

நியூயார்க்: "முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார். இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குகிறது" என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில்
முகமது யூனுஸ் பேசியதாவது: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்த கடந்த ஆண்டு போராட்டங்களை இந்தியா விரும்பவில்லை. இதனால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே உறவுகள் விரிசல் அடைந்துள்ளது. மாணவர்கள் செய்தது இந்தியாவுக்குப் பிடிக்காததால் தற்போது எங்களுக்கு அவர்களுடன் பிரச்னைகள் உள்ளன.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார். இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குகிறது. பிரச்னைகளை உருவாக்கிய ஷேக் ஹசீனாவை இந்தியா வரவேற்கிறது. ஹசீனாவின் அறிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களை மோசமாக்கியுள்ளன.
இவ்வாறு முகமது யூனுஸ் பேசினார்.
வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் ஹசீனா மற்றும் பிற அவாமி லீக் தலைவர்களுக்கு எதிராக ஏராளமான குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு இந்தியா, வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், வங்கதேச சுதந்திரப் போராட்டம் நடந்தபோது, பல்வேறு சித்ரவதைகள் செய்து மக்களை கொன்ற பின்னணி கொண்ட பாகிஸ்தானுடன் முகமது யூனுாஸ் நட்புறவு பாராட்ட தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.




