அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர் இருவருக்கு உயர் பதவி

18

வாஷிங்டன்: அமெரிக்காவின் இரு முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களாக இந்தியர்கள் இரண்டு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.


அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எச் - 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதிபர் டிரம்ப் உயர்த்தினார்.

இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதாக டிரம்புக்கு ஆதரவு அளிக்கும் குடியரசு கட்சி பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருக்கின்றனர். இத்தகைய பிரசாரத்திற்கு மத்தியில், அமெரிக்காவின் இரு முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களாக இந்தியர்கள் இரண்டு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.



டி-மொபைல் நிறுவன சி.இ.ஓ.,வாக, சீனிவாஸ் கோபாலன், 55, மால்சன் கூர்ஸ் நிறுவன சி.இ.ஓ.,வாக ராகுல் கோயல், 49, நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அதன் விபரம் பின்வருமாறு:


அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனமான டி-மொபைலில், 55 வயதான சீனிவாஸ் கோபாலன் நவம்பர் 1ம் தேதி சி.இ.ஓ.,வாக பொறுப்பு ஏற்கிறார். ஐஐஎம் ஆமதாபாத்தின் முன்னாள் மாணவரான கோபாலன், தற்போது டி-மொபைலின் சீப் ஆப்ரேட்டிங் ஆபிசராக பணியாற்றுகிறார்.
தற்போது அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனிவாஸ் கோபாலன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டி-மொபைலின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.



இந்த நிறுவனம் சாதித்ததைப் பார்த்து நான் நீண்ட காலமாக பிரமித்து வருகிறேன். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வது போல் வேறு யாரும் செய்ய சாத்தியமில்லை. இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

மால்சன் கூர்ஸ் நிறுவன சி.இ.ஓ.,வாக ராகுல் கோயல், 49, நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அக்டோபர் 1ம் தேதி சிஇஓவாக பொறுப்பு ஏற்கிறார். இவர் மால்சன் கூர்ஸ் நிறுவனத்தில் 24 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.



இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், அமெரிக்காவில் வணிகப் படிப்புகள் பயில செல்வதற்கு முன்பு, மைசூரில் பொறியியல் பட்டப்படிப்பினை பயின்றார். இவர் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள மால்சன் கூர்ஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்களில் உயர் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement