தினம் தினம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே கேள்வி: திருமாவின் இன்றைய குறி விஜய்!

32

சென்னை: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன் இன்று (செப் 24), ''வெறுப்பு அரசியல் செய்கிறார் விஜய். அவர் பேசுவது திமுக எதிர்ப்பு அரசியல், மக்களிடம் எடுபடாது'' என தெரிவித்துள்ளார்.


இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: ஜிஎஸ்டி மூலம் பெரும் பாதிப்பு அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம். காலம் தாழ்ந்த முடிவாக பிரதமர் மோடியின் முடிவு உள்ளது. இதனால் பெரிய பலன் எளிய மக்களுக்கு கிட்டவில்லை என்றாலும் கூட இந்த முடிவை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது. பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு என்றாலே இதுபோல கட்டுப்பாடுகள் இருக்கும் தான்.

திமுக எதிர்ப்பு

விஜய்க்கு தான் அவையாவும் புதிதாக இருக்கிறது. எங்களுக்கு 35 வருடங்களாக பழகிவிட்டது. எந்த மாநாடு நடத்தினாலும், பேரணி நடத்தினாலும் ஆளுங்கட்சி கூட்டணியாக இருந்தாலும் எங்களும் தரும் நிபந்தனைகள் தான் அவருக்கும் அளிக்கப்படுவதாக நான் நம்புகிறேன். அவருக்கு அரசோ, போலீசாரோ நெருக்கடி தருவதாக எனக்கு தெரியவில்லை.சுதந்திரமாக பயணிக்கிறார். அவர் சுதந்திரமாக பேசுகிறார். திமுக எதிர்ப்பு என்பதை விட திமுக வெறுப்பை அவர் அரசியலாக பேசி கொண்டு இருக்கிறார்.

வெறுப்பு அரசியல்

எதிர்ப்பு என்பது வேறு, வெறுப்பு என்பது வேறு. அவர் தான் என்ன செய்ய போகிறோம். தான் செய்யப்போவது என்ன என்பதை விட, திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை வெறுப்பு அரசியலாக முன் வைக்கிறார் விஜய். வெறுப்பு அரசியல் பெரிதும் மக்கள் மத்தியில் எடுபடாது. ஆகவே அவருடைய செயல் திட்டங்கள் குறித்து என்ன பேசுவார் என்று மக்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கு அவர் தீனி போடுவதாக தெரியவில்லை.

மக்கள் செல்வாக்கு

அதிமுக மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு உடைய கட்சி என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அது ஒரு திராவிட இயக்கம். ஈவெரா, அண்ணாதுரை கொள்கைகளை உள்வாங்கி கொண்டு மக்களுக்கு பணியாற்றி இயக்கம். இன்றைக்கு சங்கப் பரிவாரின் கட்டுப்பாட்டிற்கு போய் விடுமோ என்ற ஐயத்தை எழுப்பும் வகையில் அதிமுக தலைவர்களின் போக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் கவலை அளிக்க கூடிய ஒன்று தான். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Advertisement