ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மொபைல் போன் ஏற்றுமதி: 5 மாதங்களில் சாதனை

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைகள் இந்தியாவில் செயல்பட தொடங்கியதில் இருந்தே, மொபைல் போன் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு மொபைல் போன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஏற்றுமதியானது 55 சதவீதம் உயர்வை கண்டுள்ளது. நாட்டின் மொத்த மொபைல் போன் ஏற்றுமதியில் 72 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில், பெரும்பகுதி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது என்று அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி டிம் குக் இந்த ஆண்டு ஜூலை மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.















