ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்த இஸ்ரேல் பிரதமர்; கைது அச்சம் காரணம்!

9


ஜெருசலேம்: ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம், ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து, மாற்று வழியில் பயணம் மேற்கொண்டது.


அமெரிக்காவில் 80வது ஐ.நா., பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் முதலாவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் பேசினார். அதை தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர். அந்தவகையில், ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.


அவரது விமானம், வழக்கமாக, இஸ்ரேலில் இருந்து கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் வான்வெளி வழியாக தான் செல்லும். ஆனால் இந்த முறை, ஐநா சபைக்கு நெதன்யாகுவின் விமான பயணம் வேறு பாதையில் இருந்தது.
சிறிது நேரம் மட்டுமே கிரீஸ் மற்றும் இத்தாலி வான்வெளியை கடந்து சென்றது. அங்கிருந்து மத்தியத்தரைக்கடல் மீது பறந்த விமானம், ஜிப்ரால்டர் தடத்தை கடந்து அட்லாண்டிக் கடல் வழியாக அமெரிக்கா சென்று சேர்ந்தது. இதனால் விமானத்தின் பயண நேரம் அதிகரித்தது.



இவ்வாறு ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியை பயன்படுத்தாமல், கடல் மீது பறந்து அமெரிக்கா சென்றதற்கு முக்கிய காரணம் உள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் இந்த வாரத்தில் அங்கீகரித்துள்ளது. ஸ்பெயின் ஏற்கனவே அங்கீகரித்து விட்டது.

ஐரோப்பிய நாடுகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்டை அமல் செய்வதற்கான ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. காசாவில் நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்காக, நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதனால் விமானம் அவசரமாக தரையிறங்கும் பட்சத்தில், கைது வாரண்டை அந்த நாடுகள் அமல் செய்யவும் வாய்ப்புள்ளது. அத்தகைய ரிஸ்க் எடுப்பதற்கு தயங்கியே, இஸ்ரேல் பிரதமரின் விமானம், கடல் மீது பறந்து அமெரிக்கா சென்றதாக, இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஐநா பொதுச்சபைவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெள்ளிக்கிழமை உரையாற்ற உள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கவும் உள்ளார்.

Advertisement