அமைச்சர் ராஜா பேச்சுக்கு தமிழக பா.ஜ., கண்டனம்

2

சென்னை : 'தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜாவின் கருத்து, வட மாநில பெண்களை அவமதிப்பது மட்டுமல்ல; நம் நாட்டை வடிவமைத்த பெண் சக்தியின் உணர்வை அவமதிப்பதாகும்' என, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ராஜா, 'இந்தியாவில், 100 ஆண்டுகளுக்கு முன், பெண்களை ஒரு மனிதராகவே மதிக்காத நிலை இருந்தது. இன்றும், வட மாநிலங்களில் இந்த நிலை உள்ளது' என பேசியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ள அறிக்கை:

'வட மாநிலங்களில் பெண்கள் மனிதர்களாக கருதப்படுவதில்லை' என்று அமைச்சர் ராஜா பேசியுள்ளார். இதை, காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா, மேற்கு வங்க முதல்வர் மம்தா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் ஆகியோர் ஆதரிக்கின்றனரா?

ராஜாவின் கருத்து, வட மாநிலங்களின் பெண்களை அவமதிப்பது மட்டுமல்ல; நம் நாட்டை வடிவமைத்த பெண் சக்தியின் உணர்வை அவமதிப்பதாகும்.

'இண்டி' கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சர், நம் நாட்டின் வரலாற்றை, வளர்ச்சி, முன்னேற்றத்தை வடிவமைத்த துணிச்சலான பெண் ஆட்சியாளர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோரின் பாரம்பரியத்தை புறக்கணித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

பெண்களின் கண்ணியத்திற்காக நிற்பதை விட, கூட்டணி அரசியல் முக்கியமா?

வட மாநில பெண்களிடம் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். பெண் சக்தி, நாட்டின் பலம். அதை குறைத்து மதிப்பிடுவது, நாட்டையே பலவீனப்படுத்துவதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement