'இடியட்' என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? 'கூகுள்' சுந்தர் பிச்சை விளக்கம்

வாஷிங்டன்: கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் படம் ஏன் வருகிறது என்பது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.
இணையதள தேடு இயந்திரமான கூகுள் தளத்தில், நாம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து தேடும்போது, எதைக் கேட்கிறார்கள் என்று புரிந்துகொண்டு அதற்கான பதில்களை அளிக்கிறது. அதன் பின்னால் மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா அல்லது தொழில்நுட்பமா என்ற சந்தேகம் சாதாரண மக்களுக்கு எப்போதும் இருப்பதுண்டு. உலகின் முக்கிய நபரான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விஷயத்தில் இது படித்த அறிவாளிகளுக்கே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் டிரம்பின் படம் வரும் சர்ச்சைதான் அதற்கு காரணம். சில ஆண்டுகளுக்கு முன், கூகுள் தவறான தகவல்களை வழங்குவதாகவும், தன் கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்டின் நீதித் துறைக்கான குழு விளக்கம் கேட்டிருந்தது. அதன்படி ஆஜரான சுந்தர் பிச்சை அளித்துள்ள விளக்கம்: இணையத்தில் தேடப்படும் எந்த ஒரு விஷயத்திற்கும் மனிதர்களால் பதில் அளிக்கப்படுவதில்லை.
கூகுள் தளம், மக்கள் இணையத்தில் சேர்க்கும், தேடும், பதிவேற்றம் செய்யும் ஆயிரக்கணக்கான 'கீவேர்டு' எனப்படும் வார்த்தைகளை, புகைப்படங்களை ஸ்கேன் செய்து வைத்திருக்கும். பிறகு தேடப்படும் வார்த்தையுடன் தொடர்புடையவற்றை, ஏற்கனவே சேகரித்து வைத்திருப்பதிலிருந்து தொகுத்து வழங்கும்.
இது மக்கள் இணையத்தில் என்ன பதிவேற்றம் செய்கிறார்களோ அதையே வெளிப்படுத்தும். கூகுள் சொந்தமாக எந்த கருத்தையும் உருவாக்குவதில்லை. கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தேடுதல்கள் நடந்துள்ளது. அவற்றையெல்லாம் எந்த மனிதராலும் தேடி முடிவுகளை வழங்க முடியாது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.









