தட்டாஞ்சாவடி தொகுதியில் மீண்டும் களம் இறங்கும்

த ட்டாஞ்சாவடி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார்.

புதுச்சேரி பா.ஜ., நியமன எம்.எல்.ஏ., வெங்கடேசன் கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலின்பேரில், தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீண்டும் தட்டாஞ்சாவடிதொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றார்.

தட்டாஞ்சாவடி தொகுதி வெங்கடேசனுக்கு புதிது அல்ல. கடந்த 2019ம் ஆண்டு தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அவர், அத்தொகுதியில் 10,906 ஓட்டுகளை பெற்றார். என்.ஆர்.காங்.. சார்பில் போட்டியிட்ட நெடுஞ்செழியனுக்கு 9,367 ஓட்டுகள் கிடைத்தது.

இதனால் வெங்கடேசன் தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில், 1,539 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். என்.ஆர்.காங்., கட்சியின் கோட்டையான தட்டாஞ்சாவடியில் அவர் வெற்றி பெற்றது அந்நேரத்தில் அனைவரது புருவங்களையும் உயர வைத்தது.

2021ல் புதுச்சேரி அரசியல் நெருக்கடியின் போது, தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த அவர் சில மாதங்களாக அமைதி காத்தார். அதன் பிறகு பா.ஜ.,வில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்.

அவரை 2021 மே 11 முதல் நியமன எம்.எல்.ஏ.,வாக நியமித்து பா.ஜ.,வும் அழகு பார்த்தது. தற்போது பா.ஜ., மேலிட உத்தரவின்படி, தனது பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் மக்களை சந்தித்து எம்.எல்.ஏ.,வாக முடிவு செய்து தட்டாஞ்சாவடி தொகுதியில் தனது ஆதரவாளர்களுடன் தொகுதியில் கட்சி பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இந்த முடிவு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement