பீஹார் தேர்தல் களம் சூடுபிடித்தது; இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: விரைவில் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் சிறப்புத் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை இன்று (செப்டம்பர் 30)இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது.


பீஹாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த 2020ம் ஆண்டில், தேர்தல் கமிஷன் சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பே தேர்தல் தேதியை அறிவித்தது.

இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று (செப்டம்பர் 30) சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது.


வரைவுப் பட்டியலுடன் ஒப்பிடும் போது, ​​இறுதி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, பாட்னா மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இப்போது 48,15,294 ஆக உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 46,51,694 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாத கால உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் செயல்முறைக்குப் பிறகு, பாட்னா மாவட்டம் இறுதிப் பட்டியலில் 1,63,600 வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


வாக்காளர்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தங்களது விவரங்களை பெற தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கிடையே விரைவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்தது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பொது கூட்டங்கள் நடத்தி உரையாற்றி வருகின்றனர்.

Advertisement