அரசு அதிகாரிகளின் பேட்டி ஒரு நபர் ஆணைய விசாரணையை பாதிக்கும்: இபிஎஸ்

சென்னை: '' கரூர் துயர சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகளின் பேட்டி, ஒரு நபர் கமிஷனின் விசாரணையை பாதிக்கும்,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் அமுதா, டிஜிபி மற்றும் ஏடிஜிபி உள்ளிட் டோர் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் இபிஎஸ் வெளியிட்டஅறிக்கையில் கூறியுள்ளதாவது: கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன? இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் என்று கருதப்பட வேண்டியுள்ளது.
ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை; அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான். மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.