கிழக்கு கடற்கரை சாலையில் வயல் வெளிகளில் தொடரும் தீ வைப்பு வாகன ஓட்டிகள் பாதிப்பு

திருப்புல்லாணி : -ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையோரம் ஐந்திணை பூங்கா அருகே காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து எரிந்த தீயின் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

திருப்புல்லாணி அருகே ஐந்திணை பூங்கா செல்லும் வழியில் இருபுறங்களிலும் புதர் மண்டிய நிலையில் வயல்வெளி மற்றும் சீமைக் கருவேல மரக் காடுகள் உள்ளன.

இந்நிலையில் மர்ம நபர்கள் காய்ந்திருந்த நாணல் சருகு, புற்களுக்கு தீ வைத்ததால் அவை படர்ந்து சாலை ஓரங்களில் அதிகளவு புகை மூட்டத்தை ஏற்படுத்தியது.

இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பல மீட்டர் தொலைவிற்கு புகையின் தாக்கம் தொடர்ந்தது. இதனால் முகப்பு விளக்கு எரிய விட்டு கனரக வாகனங்கள் சாலையை கடந்தன.

வாகன ஓட்டிகள் கூறியதாவது:

வயல்வெளி சாலையோரங்களில் தீ வைப்பதால் அது காற்றில் பரவி அதிகளவு புகை மூட்டத்தை ஏற்படுத்துவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை பரவுகிறது.

இதனால் மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இது போன்ற நிகழ்வுகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் மவுனம் சாதிக்கின்றனர்.

எனவே பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலையோரங்களில் தீ வைக்கும் போக்கை தடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement