தெலங்கானாவில் தேங்காய்களுக்கு இடையே மறைத்து 400 கிலோ கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது

1

ஹைதராபாத்: தேங்காய் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை தெலங்கானா போலீசார் பறிமுதல் செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ரிமோஜி பிலிம் சிட்டிக்கு அருகே வந்த வாகனத்தை ரச்சகொண்டா போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் தேங்காய்கள் இருந்த நிலையில், அதற்கு நடுவே, மூட்டை மூட்டையாக கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், ஹைதராபாத்தில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி செல்லப்பட்டதாகவும், இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இரு முக்கிய சப்ளையர்கள் உட்பட மேலும் இரண்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement