தாய் கண்முன் இளம்பெண் பலாத்காரம்: போலீஸ் கான்ஸ்டபிள்கள் 2 பேர் 'டிஸ்மிஸ்'

49


சென்னை : வாகன சோதனை என லாரியை நிறுத்தி, அதில் இருந்த இரண்டு பெண்களை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, தாய் கண் முன், 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் இரண்டு பேர், நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர்.


ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு, சரக்கு வாகனம் ஒன்று, செப்டம்பர் 29ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்தது. இந்த வாகனத்தின் ஓட்டுநர், ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை மற்றும் சுவாமி தரிசனம் செய்ய, தன் அக்காவையும், 19 வயதான அக்கா மகளையும் அழைத்து வந்துள்ளார். சரக்கு வாகனம் திருவண்ணாமலையை நெருங்கியதும், புறவழிச்சாலை வழியாக வேட்டவலம் சாலையில் இருந்து நகருக்குள் செல்ல ஓட்டுநர் திட்டமிட்டுள்ளார்.


அதன்படி, அதிகாலை 2:00 மணியளவில், புறவழிச்சாலை வழியாக ஏந்தல் என்ற இடத்தில் சென்றபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள்களாக பணிபுரிந்து வந்த சுரேஷ்ராஜ், 30, மற்றும் சுந்தர், 32, ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.


அப்போது, ஓட்டுநருடன் இரண்டு பெண்கள் இருந்ததால், சந்தேகம் ஏற்படுவதாக கூறி மூவரையும் கீழே இறக்கி உள்ளனர். அப்போது, 'இது என் அக்கா, பக்கத்தில் நிற்பது என் அக்கா மகள். ஆந்திராவில் இருந்து ஆயுத பூஜைக்காக வாழைத்தார் ஏற்றி வருகிறேன். அக்கா மற்றும் அக்கா மகளையும், சுவாமி தரிசனம் செய்ய அழைத்து வந்தேன்' என ஓட்டுநர் கூறியுள்ளார்.


'நீ சொல்வதை எங்களால் நம்ப முடியாது. நீ வாகனத்தை எடுத்துச் சென்று, வாழைத் தார்களை இறக்கிவிட்டு கோவிலுக்கு வந்து விடு. நாங்கள் இரண்டு பெண்களையும், எங்கள் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு வந்து விடுகிறோம்' என்று கூறியுள்ளனர்.
ஓட்டுநர் மறுப்பு தெரிவித்த போது, 'உன் மீது கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து விடுவோம்' என மிரட்டி உள்ளனர்.


அதன்பின், இரண்டு பெண்களையும் தனித்தனியாக இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஏற்றி, ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். இருவரையும் மிரட்டி, தாய் கண் முன், 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன்பின், இரண்டு பெண்களையும் அழைத்து வந்து, திருவண்ணாமலை புறவழிச் சாலையில் இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதிகாலை 4:00 மணியளவில் அந்த வழியாகச் சென்ற நபர்கள், அழுது கதறியபடி நின்ற இரண்டு பெண்களிடமும் விசாரித்து உள்ளனர்.


அப்போது, போலீஸ் கான்ஸ்டபிள்கள் இரண்டு பேர், தன் மகளின் கற்பை சூறையாடியதை தாய் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


தகவல் அறிந்து, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., சுதாகர், மருத்துவமனைக்கு சென்று இளம் பெண்ணிடம் விசாரித்தார்; சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது, போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் மனித மிருகங்களாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் அளித்த புகாரின்படி, மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோரை கைது செய்தனர். உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 311ன் கீழ், போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்து, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, செப்., 30ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement