முதல் டெஸ்ட்: கேஎல் ராகுல் அரைசதம்

1

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர் கேஎல் ராகுல் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.


அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு, இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக, ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.



அதன்படி, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக, சிராஜூம், பும்ராவும் வேகத்தில் மிரட்டினர். இதனால், அந்த அணி 42 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேம்ப்பெல் (8) விக்கெட் பும்ராவும், டேக்நரைன் சந்திரபால் (0), அதனஷே (12), கிங் (13) ஆகியோரின் விக்கெட்டுகளை சிராஜூம் வீழ்த்தினர்.

அதன்பிறகு, சாய் ஹோப் (26), கேப்டன் சேஸ் (24), க்ரீவ்ஸ் (32) ஆகியோர் சிறிதுநேரம் தாக்கு பிடித்தனர். பின்னர், சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் சரிந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்னுக்கு ஆல்அவுட்டானது.


இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிடங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கும், சாய் சுதர்சன் 7 ரன்னுக்கும் அவுட்டாகினர். இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து விளையாடி வருகிறது. கேஎல் ராகுல் 53, கேப்டன் சுப்மன் கில் 18 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.


சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோகித் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் ஓய்வை அறிவித்து விட்டதால், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்கள் இல்லாமல் இந்திய அணி தனது சொந்த மண்ணில் முதல்முறையாக களம் இறங்குகிறது.

Advertisement