காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!

1

புதுடில்லி: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்கேயிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அவர், ''கார்கேயின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 83. இவருக்கு காய்ச்சல் காரணமாக, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர். இதையடுத்து, அவருக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்பட உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்., தலைவர் கார்கேவை, கர்நாடக முதல்வர் சித்தராமையா மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் இன்று (அக் 02) உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்கேயிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.




இது குறித்த பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கார்கேயிடம் பேசினேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். விரைவில் கார்கே குணமடைய வேண்டும். கார்கேயின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement