ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா

வாஷிங்டன் : உக்ரைனுக்கு 'டொமாஹாக்ஸ்' ஏவுகணைகளை வழங்கவும், ரஷ்யாவுக்குள் நீண்ட துாரம் சென்று தாக்குவதற்கு தேவையான உளவு தகவல்களை வழங்கவும் அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டாக தொடர்கிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு நடத்தினார். இருப்பினும், மோதல் முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து, உக்ரைனுக்கு டொமாஹாக் ஏவுகணைகளை வழங்கவும், ரஷ்யாவுக்குள் நீண்ட துாரம் சென்று தாக்குதல் நடத்த தேவையான உளவு தகவல்களை வழங்கவும் அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.
அமெரிக்கா இதுபோன்ற உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவது இதுவே முதல்முறை. இதன் வாயிலாக, ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் குழாய் வழிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பை குறி வைத்து தாக்குதல் நடத்துவது எளிதாக்கும் என தெரிகிறது.
நீடித்த மோதலுக்கு மத்தியில், எரிசக்தி மற்றும் எண்ணெய் வளங்கள் ரஷ்யாவின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளதால் அதை தகர்ப்பதற்கு குறி வைக்கப்படுகிறது. ரஷ்யாவுக்கான வருவாயை கட்டுப்படுத்தினால், உக்ரைன் உடனான போரை புடின் முடிவுக்கு கொண்டு வருவார் என டிரம்ப் கருதுவதால் இது குறித்து பரிசீலித்து வருகிறார்.
இதன் ஒருபகுதியாக, நீண்ட துார தாக்குதல்களில் உக்ரைனுக்கு உதவ உளவுத்துறை அமைப்புகளையும், தன் ராணுவத்தையும் அனுமதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கடந்த வாரம் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதேபோன்ற ஆதரவை, 'நேட்டோ' எனப்படும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளும் வழங்க வேண்டுமென அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைனுக்கு வழங்க பரிசீலிக்கப்படும் டொமாஹாக்ஸ் ஏவுகணை 2,500 கி.மீ., வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இது மாஸ்கோவையும், ரஷ்யாவின் மேற்கில் உள்ள பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் வல்லமை கொண்டது. கடந்த வாரம் நியூயார்க்கில் நடந்த ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இதுகுறித்து டிரம்புடன் பேச்சு நடத்தினார். ஆனால், இந்த ஏவுகணை வினியோகம் குறித்து அமெரிக்கா இன்னமும் முடிவு எதுவும் செய்யவில்லை






மேலும்
-
வரி விதிக்கும் டிரம்பின் நடவடிக்கை தோல்வியை தழுவும்: ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டம்
-
‛அ' னா, ‛ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: :மதுரை வித்யாரம்பத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர் : குழந்தைகள் கல்விக்கண் திறந்து ஆசி வழங்கிய கலைமகள்
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
-
மொராக்கோ அரசுக்கு எதிரான போராட்டத்தில் இளம் தலைமுறையினர் மூன்று பேர் பலி
-
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
-
கார் மோதி விவசாயி பலி