தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்

1

சென்னை: ''தீபாவளி பண்டிகையை ஒட்டி, 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதில், 50 சதவீத ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படும்,'' என, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே சார்பில், காந்தி ஜெயந்தி மற்றும் துாய்மை சேவை பிரசார நிறைவு நிகழ்ச்சி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் மகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், கூடுதல் கோட்ட மேலாளர்கள் தேஜ் பிரதாப் சிங், அங்கூர் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் அளித்த பேட்டி:

ரயில் நிலையங்களில் மூன்று கட்டங்களாக துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த துாய்மை பணிகளில், 28,000 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்; 8.6 டன் பிளாஸ்டிக் மற்றும் 165 டன் இரும்பு கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில், மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதில், தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் 50 சதவீதம் சிறப்பு ரயில்களும், பிற மாநிலங்களுக்கு 50 சதவீதம் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்

ஜனவரியில் இயங்கும்

சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் கூறியதாவது: 'சென்னை ஒன்' செயலி வாயிலாக, மின்சார ரயில்களுக்கான டிக்கெட் எடுத்து, ஒரு லட்சம் பேர் பயணித்துள்ளனர். வேளச்சேரி மேம்பால ரயில் திட்டத்தை, மெட்ரோவுடன் இணைக்கும் பணிகளும் நடக்கின்றன. அனைத்து பணிகளும் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடை, மேற்கூரை, பிரமாண்டான நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த ரயில் நிலையம், வரும் ஜனவரியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement