உயிருடன் இருந்தபோதே அஞ்சலி பேனர் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு

திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே உயிருடன் இருந்தபோதே, அஞ்சலி பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூந்தலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ், 59; விருப்ப ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர். இவர், கடந்த 30ம் தேதி பைக்கில் உளுந்துார்பேட்டை சென்று திரும்பியபோது, டிராக்டர் மோதி படுகாயமடைந்தார். உடன், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று காலை ராமதாஸ் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதால், ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.

இதையறிந்த உறவினர்கள், வீட்டில் பந்தல் அமைத்ததுடன், உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர். கண்ணீர் அஞ்சலி பேனர் வைக்கப்பட்டது. உறவினர்கள் பலரும் மாலையுடன் வர துவங்கினர்.

இந்நிலையில், ராமதாசை வீட்டிற்கு அழைத்து வரும்போது உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள், உடனே, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர், உயிர் இருப்பதாக கூறி, விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு, மாலை வரையில் சிகிச்சையில் இருந்தவர்கள் இரவு 7:00 மணிக்கு உயிரிழந்துள்ளார். இதனை அதிகார பூர்வமாக டாக்டர் தெரிவித்தனர்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உயிருடன் இருக்கும்போதே, அஞ்சலி பேனர் வைத்த சம்பவம் உளுந்துார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement