தவெகவுக்கு ஐகோர்ட் கண்டனம்: கரூர் சம்பவம் பற்றி விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு

51

சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


@1brகரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் விசாரித்து வருகிறார்.

உத்தரவு



இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தக் குழுவில் கரூர் எஸ்பியை இணைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது: சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்கக்கூடாது. என்ன மாதிரியான கட்சி இது. தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை.

விஜய் மீது கருணை



கட்சித் தலைவர் விஜய் சம்பவ இடத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டார். வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இது அவரது மன நிலையை காட்டுவதாக உள்ளது. சூழ்நிலை முற்றிலும் தவறாக கையாளப்பட்டுள்ளது. மாநில அரசு விஜய் மீது கருணை காட்டுகிறது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.

நிகழ்ச்சியின் அமைப்பாளராக எந்தவிதமான பொறுப்பும் இல்லையா என்று தவெகவினரை பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார். போலீசாரிடமும் இதே கேள்வியை நீதிபதி எழுப்பினார்.

பேரழிவு



நீதிபதி மேலும் கூறுகையில், ''மனிதர்களால் மிகப்பெரும் பேரழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தன்னுடைய பொறுப்புகளை கைவிட்டு நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. கூட்ட நெரிசலானது கட்சியின் தொண்டர்களால் தொண்டர்களின் நடத்தையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளனர்.
'' நடந்த சம்பவத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து கொண்டுள்ளது. தவெக பஸ் அடியில் இரு சக்கர வாகனங்கள் சிக்கியதை பார்த்த பிறகும், அதன் டிரைவர் நிறுத்தாமல் ஓட்டிச் செல்கிறார். இது மோதிவிட்டு நிற்காமல் செல்வதை போன்றது அல்லவா? ஏன் மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ் மீது வழக்குப்பதியவில்லை. போலீசார் அதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை,'' என தெரிவித்தார்.



ஆதவ் அர்ஜூனா மீது என்ன நடவடிக்கை





விசாரணையின் போது சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட பதிவு சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் காட்டப்பட்டது

அப்போது நீதிபதி கூறுகையில், புரட்சி ஏற்படுத்துவது போல பதிவிட்டுள்ளார்.இதற்கு பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள். இதுபோல் பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் பார்த்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது. தேவையான போது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு சின்ன வார்த்தை கூட பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும். இவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நீங்கள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement